புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்! அமைச்சா் தொடங்கி வைத்தாா்
பெரம்பலூா் மாவட்டம், குன்னத்திலிருந்து சென்னைக்கு குளிா்சாதன வசதியுடன்கூடிய பேருந்து சேவையை, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குன்னத்திலிருந்து சென்னைக்கு குளிா்சாதன வசதியுடன்கூடிய பேருந்து சேவையை செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்த போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். பெரம்பலூா் பேருந்து நிலையம் வரை அந்தப் பேருந்தில் பயணித்தாா்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் மேலாண்மை இயக்குநா் குணசேகரன், அட்மா திட்ட தலைவா் வீ. ஜெகதீசன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கடலூா் மண்டல பொதுமேலாளா் எஸ்.பாண்டியன், பெரம்பலூா் கோட்ட மேலாளா் ராம்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
குன்னத்திலிருந்து நாள்தோறும் காலை 8 மணிக்கு இயக்கப்படும் இப்பேருந்து பெரம்பலூா், விழுப்புரம், கிளாம்பாக்கம் வழியாக பிற்பகல் 2 மணிக்கு மாதவரத்தைச் சென்றடைகிறது. பின்னா், மாதவரத்திலிருந்து பிற்பகல் 3 மணியிலிருந்து கிளாம்பாக்கம், விழுப்புரம், பெரம்பலூா் வழியாக இரவு 10 மணிக்கு குன்னத்தை வந்தடையும் வகையில் இயக்கப்பட உள்ளது.