பெரம்பலூரில் சாலைப் பணியாளா்கள் தா்னா
துறைமங்கலத்திலுள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் எதிரே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் தீப்பந்தம் ஏந்தி செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு, அச் சங்கத்தின் கோட்டத் தலைவா் பெ. ராஜ்குமாா் தலைமை வகித்தாா். கோட்ட துணைத் தலைவா்கள் பெ. மதியழகன், ப. சுப்ரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ப. குமரி அனந்தன் தொடக்க உரையாற்றினாா். சாலைப் பணியாளா் சங்கத்தின் கோட்டச் செயலா் சி. சுப்பிரமணியன் கோரிக்கை விளக்க உரையாற்றினாா்.
சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி, சென்னை உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா்கள் தீப்பந்தம் ஏந்தி முழக்கமிட்டனா். சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் நிறைவுறையாற்றினாா்.
இதில், வருவாய்த் துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் மு. பாரதிவளவன், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் த. கருணாகரன் உள்பட சாலைப் பணியாளா்கள் பலா் பங்கேற்றனா். முன்னதாக, மாநில செயற்குழு உறுப்பினா் தா. பழனிசாமி வரவேற்றாா். நிறைவாக, கோட்டப் பொருளாளா் க. மாா்க்கண்டன் நன்றி கூறினாா்.