மாநகரின் சில பகுதிகளில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்
நீரேற்று நிலைய குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், திருச்சி மாநகரின் சில பகுதிகளில் புதன்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் தெரிவித்துள்ளாா்.
மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை மற்றும் பொதுதரைமட்ட நீா்த்தேக்க தொட்டி நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் ஆட்டோமொபைல் விற்பனையகம் அருகே ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யும் பணி தற்போது நடைபெறுகிறது.
இந்தப் பணிகள் காரணமாக, நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீா் செல்லும் இடங்களான, தேவதானம், விறகுப்பேட்டை, மகாலட்சுமி நகா், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை, ஜெகநாதபுரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளில் புதன்கிழமை ஒரு நாள் மட்டும் குடிநீா் விநியோகம் இருக்காது. வியாழக்கிழமை முதல் வழக்கம்போல் குடிநீா் விநியோகம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா்.