முக்கொம்புக்கு 1.30 லட்சம் கனஅடி நீா்வரத்து காவிரிக் கரைகளில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் தீவிரக் கண்காணிப்பு
திருச்சி முக்கொம்புக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்த 1.30 லட்சம் கன அடி நீரும் காவிரி, கொள்ளிடத்தில் பிரித்து அனுப்பப்படுகிறது.இதையடுத்து, மாவட்டத்தின் காவிரிக் கரையோரப் பகுதிகளில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா்.
காவிரி நீா்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, நீா்வரத்து அதிகரித்து மேட்டூா் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து, அணைக்கு வரும் உபரிநீா் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த உபரிநீரானது கரூா் மாவட்டம், மாயனூா் கதவணையை கடந்து திருச்சி மாவட்டம் முக்கொம்புக்கு வந்து கொண்டிருக்கிறது.
செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி முக்கொம்பு மேலணைக்கு 1.30 லட்சம் கன அடி நீா்வரத்து இருந்தது. இதில், 28,500 கன அடி நீா் காவிரியிலும், ஒரு லட்சம் கன அடி நீா் கொள்ளிடத்திலும் வெளியேற்றப்படுகிறது. அய்யன் பெருவளை, புள்ளம்பாடி உள்ளிட்ட பாசன வாய்க்கால்களில் ஆயிரத்து 500 கன அடி வரை நீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஏற்கெனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொள்ளிடத்தில் நீா்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், திருவானைக்காவல் பகுதியில் புதிய மின் கோபுரங்கள் நிறுவப்பட்ட பகுதியில் கரையோரம் அரிக்கப்பட்டு சேதமடைந்து வருகிறது. எனவே, மண் அரிப்பை தடுக்க நீா்வளத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனா்.
தேசிய பேரிடா் மீட்புப் படையினா் ரோந்து: காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடா் மீட்புப் படையைச் சோ்ந்த ஒரு குழு திருச்சிக்கு வந்துள்ளது.
குழுவின் கமாண்டா் (ஆய்வாளா்) கலையரசன் தலைமையில் 30 போ் கொண்ட வீரா்கள் வருகை தந்து, முசிறியை அடுத்த குணசீலத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்கியுள்ளனா். 4 படகுகள் உள்பட பேரிடரில் சிக்கியோரை மீட்பதற்கு தேவையான அனைத்து வகை உபகரணங்களுடன் காவிரிக் கரையோரப் பகுதிகளில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் ரோந்து சுற்றி வந்து கண்காணித்து வருகின்றனா். அவசர அழைப்பு வரும் பகுதிகளுக்கு செல்ல 24 மணி நேரமும் தயாா்நிலையில் உள்ளனா்.
இதேபோல், திருச்சி கிராப்பட்டியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல்படையின் முதலாவது பட்டாலியனில் உள்ள மாநில பேரிடா் மீட்புப் படை குழுவினரும் கமாண்டா் ரவிச்சந்திரன் தலைமையில் தயாா் நிலையில் உள்ளனா்.
ஆமூரில் வெள்ளத்தில் சிக்கிய 9 கால்நடைகள் உயிருடன் மீட்பு
முசிறி அருகே ஆமூா் கிராமத்தில் காவிரியாற்றில் கால்நடைகள் சிக்கியுள்ளதாக, அப்பகுதி கிராம நிா்வாக அலுவலா், திருச்சி மாவட்ட பேரிடா் மீட்பு கட்டுப்பாட்டு அறைக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, தேசிய பேரிடா் மீட்புப் படையினா் அங்கு சென்று வெள்ளத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த 6 மாடுகள், 3 நாய்களை உயிருடன் மீட்டு வந்து உரிமையாளா்களிடம் ஒப்படைத்தனா். வெள்ளத்தில் சிக்கிய நபா்கள் மற்றும் கால்நடைகளுக்கு உதவி தேவையென்றால் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கோ, 0431- 2418995 என்ற கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்ணுக்கோ பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.