கிராமங்களில் சிறு, குறு கடைகளுக்கு உரிமம் தேவையில்லை! - தமிழக அரசு
கிராமப்புறத்தில் சிறு, குறு கடைகளுக்கு உரிமம் தேவையில்லை என்று தமிழக அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.
மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள வணிக கடைகளுக்கு உரிமம் இருப்பதுபோலவே ஊராட்சி பகுதிகளில் உள்ள வணிக கடைகளும் தொழில் உரிமம் பெறுவது கட்டாயம் என்று தமிழக அரசு கூறியிருந்தது.
டீக்கடைகள் முதல் திருமண மண்டபங்கள் வரை ரூ.250 முதல் ரூ.50,000 வரை கட்டணம் செலுத்தி தொழில் உரிமம் பெற வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதுதொடர்பாக ஆய்வுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரியசாமி கூறியிருந்தார்.
இதனிடையே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர்களும் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில் கிராமப்புறங்களில் தொழில் தொடங்க சிறு, குறு கடைகளுக்கு உரிமம் பெறத் தேவையில்லை என்று அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.
மேலும், கிராமப்பகுதிகளில் உள்ள கடைகளுக்கு உரிமம் கட்டாயம் என்ற செய்தி தவறானது எனவும் தமிழ்நாடு அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.