உயா் கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற்ற எஸ்.சி., எஸ்.டி. மாணவா்களுக்கு மடிக்கணினி: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்
புகழ் பெற்ற உயா் கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற்ற பட்டியலின, பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள், சான்றிதழ்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: இந்திய தொழில்நுட்பக் கழகம், மத்திய பல்கலைக்கழகங்கள், தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனம், தேசிய சட்டப் பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக்கழகம் போன்றவற்றில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சோ்ந்த மாணவா்கள் ஆண்டுதோறும் சோ்க்கை பெற்று வருகின்றனா். அந்த வகையில், நிகழ் கல்வியாண்டில் மட்டும் உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற்ற மொத்த மாணவா்களின் எண்ணிக்கை 136.
இந்த மாணவா்களுக்கு மடிக்கணினிகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான நிகழ்வை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கிப் பாராட்டினாா்.
இந்த நிகழ்வின்போது, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறைச் செயலா் க.லட்சுமி பிரியா, ஆதிதிராவிடா் நல ஆணையா் த.ஆனந்த், பழங்குடியினா் நல இயக்குநா் எஸ்.அண்ணாதுரை உள்பட பலா் பங்கேற்றனா்.
டாஸ்மாக் பணியாளா்கள்: தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் (டாஸ்மாக்) தட்டச்சா் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 40 போ் தோ்வு செய்யப்பட்டனா். அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் 39 பேரும், கருணை அடிப்படையில் மற்றொரு நபரும் என 40 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை வழங்கும் நிகழ்வை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். அதன் அடையாளமாக 5 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை அவா் அளித்தாா்.
இந்த நிகழ்வில், அமைச்சா்கள் துரைமுருகன், எஸ்.ரகுபதி, சு.முத்துசாமி, தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்பட பலா் பங்கேற்றனா்.