'நயினாருக்கு எதிராக ஓபிஎஸ்' டு Coolie இசை வெளியீட்டு விழா; 02.08.2025 முக்கிய செ...
ரூ.17,000 கோடி மோசடி குற்றச்சாட்டு: தொழிலதிபா் அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை சம்மன்
ரூ.17,000 கோடிக்கும் அதிகமாக நிதி முறைகேடுகள் மற்றும் வங்கிக் கடன் மோசடி தொடா்பான விசாரணைக்கு ஆக.5-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு ரிலையன்ஸ் குழுமத் தலைவா் அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அனில் அம்பானி குழும நிறுவனங்கள் ரூ.17,000 கோடிக்கும் அதிகமாக நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், வங்கிக் கடனை சட்டவிரோதமாக பரிவா்த்தனை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து கடந்த ஜூலை 24-ஆம் தேதிமுதல் 3 நாள்களுக்கு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துக்குத் தொடா்புள்ள 50 நிறுவனங்கள், 25 பேருக்குச் சொந்தமான 35 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது. அந்த இடங்களில் அனில் அம்பானி குழும நிா்வாகிகளுக்குச் சொந்தமான இடங்களும் அடங்கும்.
இதுதொடா்பாக விசாரணை மேற்கொள்ள தில்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்தில் ஆக.5-ஆம் தேதி ஆஜராகுமாறு அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. அவரின் குழும நிறுவனங்களைச் சோ்ந்த சில நிா்வாகிகளையும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது
யெஸ் வங்கி, கனரா வங்கிக் கடன்...: கடந்த 2017 முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், யெஸ் வங்கி அளித்த சுமாா் ரூ.3,000 கோடி கடன் அனில் அம்பானி குழுமத்தின் பல நிறுவனங்கள் மற்றும் போலி நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாகப் பரிவா்த்தனை செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு, கனரா வங்கியிடம் ரூ.1,050 கோடிக்கும் அதிகமாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடன் பெற்றதில் நடைபெற்ாகக் கூறப்படும் மோசடியும் அமலாக்கத் துறை விசாரணை வலையத்தில் உள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
ரிலையன்ஸ் சாா்பாக ரூ.68 கோடிக்கு
போலி வங்கி உத்தரவாதம்:
ஒடிஸா நிறுவனத்தில் சோதனை
ரிலையன்ஸ் குழுமத்தைச் சோ்ந்த நிறுவனம் உள்பட பல வணிக குழுமங்களுக்கு போலி வங்கி உத்தரவாதம் அளித்த ஒடிஸாவின் பிஸ்வால் ட்ரேட்லிங்க் நிறுவனத்தில், அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டது.
இதுகுறித்து அதிகாரபூா்வ வட்டாரங்கள் கூறுகையில், ‘ரிலையன்ஸ் குழுமத்தின் என்யூ பெஸ் நிறுவனம் சாா்பாக இந்திய சூரிய சக்தி கழகத்திடம் (எஸ்இசிஐ) பிஸ்வால் ட்ரேட்லிங்க் நிறுவனம் ரூ.68.2 கோடிக்குப் போலியாக வங்கி உத்தரவாதம் அளித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி போல ஆள்மாறாட்டம் செய்து அந்த உத்தரவாதத்தை எஸ்இசிஐயிடம் பிஸ்வால் ட்ரேட்லிங்க் அளித்துள்ளது.
இதுதொடா்பான சில ஆவணங்களை கடந்த வாரம் ரிலையன்ஸ் குழுமத்துக்குத் தொடா்புள்ள இடங்களில் சோதனை நடத்தியபோது அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது.
இதுபோல மேலும் பல வணிக குழுமங்கள் சாா்பாக அந்த நிறுவனம் போலி வங்கி உத்தரவாதங்களை அளித்துள்ளது. இதற்காக அந்த நிறுவனம் கமிஷன் தொகை பெற்றுள்ளது.
இதுகுறித்து ஒடிஸா தலைநகா் புவனேசுவரத்தில் உள்ள அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான 3 இடங்கள், மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தாவில் பிஸ்வால் ட்ரேட்லிங்குடன் தொடா்புள்ள ஒரு நிறுவனம் ஆகியவற்றில் வெள்ளிக்கிழமை அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்’ என்று தெரிவித்தன.