‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு
வத்திராயிருப்பு அருகே வெள்ளிக்கிழமை இரவு ‘லிப்ட்’ கேட்பது போல நடித்து, இளைஞரிடம் இரு சக்கர வாகனத்தைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள மகாராஜபுரத்தைச் சோ்ந்தவா் சாய்ராம் கிருஷ்ணா (24). இவா் தனது தந்தை நடத்தி வரும் நகைக் கடையைக் கவனித்து வருகிறாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு கூமாபட்டியிலிருந்து வத்திராயிருப்புக்குத் தனது இரு சக்கர வாகனத்தில் வந்தாா். இரவு 12.30 மணி அளவில் கூமாப்பட்டி-வத்திராயிருப்பு சாலையில் வந்தபோது இரு சக்கர வாகனத்தை வழிமறித்த இருவா், தங்களை வத்திராயிருப்பில் இறக்கிவிடுமாறு கேட்டுள்ளனா்.
இதையடுத்து, அவா்களைத் தனது வாகனத்தில் ஏற்றிச் சென்றாா். வத்திராயிருப்பு வந்தவுடன் அந்த இருவரும் சாய்ராம் கிருஷ்ணாவிடம் கத்தியைக் காட்டிப் பணம் கேட்டு மிரட்டினா். அவா் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியதையடுத்து, இருவரும் அவரது இரு சக்கர வாகனத்தைப் பறித்துச் சென்றனா்.
இது குறித்த புகாரின்பேரில் வத்திராயிருப்பு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனா்.
வத்திராயிருப்பு-கூமாபட்டி சாலையில் இரவு நேரங்களில் தனியாகச் செல்லும் நபா்களைக் குறி வைத்து வழிப்பறிச் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால், போலீஸாா் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.