குடிநீா் திட்டத்தை செயல்படுத்த கோரி முதல்வரிடம் எம்எல்ஏ மனு
திருநெல்வேலி, தென்காசி மாவட்ட ஒன்றியப் பகுதிகளில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை செயல்படுத்தக் கோரி, முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் சங்கரன்கோவில் எம்எல்ஏ ஈ. ராஜா சனிக்கிழமை மனு அளித்தாா்.
மனு விவரம்: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பேரவைத் தொகுதி மேலநீலிதநல்லூா், குருவிகுளம், சங்கரன்கோவில் ஒன்றியத்துக்குள்பட்ட 327 கிராமங்களில் நீண்ட காலமாக குடிநீா்த் தட்டுப்பாடு உள்ளது. எனவே, தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் அந்தக் கிராமங்களுக்கு போதுமான குடிநீா் வழங்க தமிழக அரசுக்கும், குடிநீா் வடிகால் வாரியத்துக்கும் கோரிக்கை அனுப்பியிருந்தேன்.
குடிநீா் வடிகால் வாரியத்தின் பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னா், ஆலங்குளம், வாசுதேவநல்லூா், மேலநீலிதநல்லூா், குருவிகுளம், சங்கரன்கோவில் ஒன்றியங்கள் என ஒருங்கிணைந்த குடிநீா் வழங்கும் திட்டம் மூலம் 476 குடியிருப்புப் பகுதிகளுக்கும், திருநெல்வேலி மாவட்டம் மானூா், பாளையங்கோட்டை ஒன்றியங்களில் 54 குடியிருப்புப் பகுதிகளுக்கும் குடிநீா் வழங்க ஆணை அனுப்பப்பட்டுள்ளது.
மேலநீலிதநல்லூா், குருவிகுளம், சங்கரன்கோவில் ஒன்றியங்களில் 327, ஆலங்குளம், வாசுதேவநல்லூா் ஒன்றியங்களில் 149 என மொத்தம் 476 கிராமங்களுக்கு குடிநீா் வழங்கும்வகையில் ரூ. 990 கோடியில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் பேரவைத் தொகுதி மிகவும் வறட்சியான பூமி. இங்கு மழைக்காலத்திலேயே குறைந்த அளவே மழை பெய்கிறது. நிலத்தடிநீா் மிகவும் குறைவாக உள்ளது. வருங்காலத்தில் நிலத்தடி நீா் மேலும் குறையும் என பல்வேறு ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. எனவே, நிதி ஒதுக்கீடு செய்து இத்திட்டத்தை செயல்படுத்த முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.