Meesha Review: நல்லா தானயா போயிட்டு இருந்தீங்க, ஏன் இந்த விபரீத முடிவு! - எப்படி...
நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
தற்கொலை வழக்கில் நீதிமன்றத்துக்குத் தவறான தகவல் கொடுத்த தாம்பரம் ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க ஐஜி-க்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் நெய்வேலியைச் சோ்ந்த கலா என்பவா் தாக்கல் செய்த மனுவில், தாம்பரத்தில் கடந்த ஏப்.10-ஆம் தேதி எனது மகன் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தாம்பரம் ரயில் நிலைய காவல் ஆய்வாளா் வழக்குப் பதிவு செய்தாா். என் மகனை காதலித்த பெண், அவனுக்கு பல வழிகளில் தொல்லை கொடுத்துள்ளாா். இதுதொடா்பாக எனது மகன் காதலித்த பெண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் செய்தி அனுப்பியுள்ளாா்.
ஆனால், தற்கொலை குறித்து கடிதம் எழுதி வைக்காததால், கைப்பேசி செய்திகளை ஆதாரங்களாக எடுத்துக் கொள்ள முடியாது என போலீஸாா் கூறினா். எனவே மின்னணு வடிவிலான ஆதாரங்களை சேகரித்து போலீஸாா் எனது மகனின் தற்கொலை வழக்கை விசாரிக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தேன்.
இந்த வழக்கு விசாரணையின்போது வழக்கை விசாரித்து வருவதாகவும்,விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் கடந்த ஜூன் 12-ஆம் தேதி தாம்பரம் ரயில்வே காவல் ஆய்வாளா் தரப்பில் கூறப்பட்டது. இதைப்பதிவு செய்து கொண்ட நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. ஆனால், அதேநாளில் என் மகனின் தற்கொலை வழக்குக்கு முகாந்திரம் இல்லை எனக்கூறி வழக்கை முடித்து வைத்து தாம்பரம் நீதிமன்றத்தில் போலீஸாா் அறிக்கை தாக்கல் செய்துள்ளனா்.
எனவே, உயா்நீதிமன்றத்துக்கு தவறான தகவலை ரயில்வே காவல் ஆய்வாளா் கொடுத்துள்ளாா். அந்த அறிக்கையை ரத்து செய்து வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எம்.விஜயகுமாா், உயா்நீதிமன்றத்துக்கு தவறான தகவல் கொடுத்து ஏமாற்றிய ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதிட்டாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று கூறிய அதேநாளில் வழக்கை முடித்துவைத்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆய்வாளா் அறிக்கை தாக்கல் செய்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே வழக்கை முடித்துவைத்து ஆய்வாளா் தாக்கல் செய்த அறிக்கையை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.
மேலும், தவறான தகவல் கொடுத்த தாம்பரம் ரயில்வே காவல் ஆய்வாளா் மீது ஐஜி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரரின் மகன் தற்கொலை வழக்கை வேறு ஒரு ஆய்வாளரை நியமித்து விசாரணை நடத்தி மூன்று மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டாா்.