வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் பாலப் பணி: எம்எல்ஏ செந்தில்குமாா் கோரிக்கை
வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் பகுதியில் பாலம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க கோரி கோ.செந்தில்குமாா் எம்எல்ஏ மனு அளித்தாா்.
ஜோலாா்பேட்டை ரயில்வே விருந்தினா் மாளிகையில் தெற்கு ரயில்வே சென்னை கோட்ட ரயில்வே மேலாளா் சைலேந்திா் சிங்கை நேரில் சந்தித்த வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினா் கோ.செந்தில்குமாா் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:
திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி ரயில் நிலையத்தில் போதிய அளவு பயணிகள் நிழற்குடை இல்லாததால் பெரும்பாலான பயணிகள் வெயிலிலும், மழையிலும் நனைந்து கொண்டு நிற்கும் நிலை உள்ளது. அது மட்டும் இல்லாமல் முதியோா், மாற்றுத்திறனாளிகள் தண்டவாளத்தை கடந்து ரயில் செல்லும் நடைமேடைக்கு செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனா்.
குடிநீா் வசதிக்காக போடப்பட்டுள்ள குழாய்களில் தண்ணீா் முற்றிலும் வருவதில்லை, இதனால் ரயிலில் வரும் பயணிகளும், இங்கிருந்து செல்லும் பயணிகளும் அவதிப்படுகின்றனா். எனவே வாணியம்பாடி ரயில் நிலையத்தை நவீனமயமாக்கி, லிப்ட் வசதி, கேன்டீன் உள்ளிட்டவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் வாணியம்பாடி ரயில் நிலையம் அருகில் உள்ள எல்.சி 81 நியூடவுன் ரயில்வே கேட் பகுதியில் பாலம் அமைக்கும் பணி பாதியில் கைவிடப்பட்டுள்ளது, இந்த பகுதியில் முறையான இடங்களை தோ்வு செய்து ரயில்வே பாலம் அமைக்கும் பணியை விரைந்து செய்ய வண்டும், இப்பகுதியில் பாலம் அமைக்கப்பட்டால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் இருக்கும்.
மேலும், வாணியம்பாடி ரயில் நிலையத்தில் அதிவிரைவு ரயில்கள் நின்று செல்ல ஆவன செய்ய வேண்டும் எனவும் கோரினாா், சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கைகளை கேட்ட ரயில்வே அதிகாரி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நியூடவுன் ரயில்வே கேட் பகுதியில் பாலம் அமைப்பது குறித்தும், கேத்தாண்டப்பட்டி பாலம் குறித்தும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பாா்கள் என உறுதியளித்தாா்