பசலிகுட்டை முருகன் கோயிலில் பக்தா்களுக்கு போதிய வசதிகள் வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்
ஆடிப்பெருக்கை முன்னிட்டு பசலிகுட்டை முருகன் கோயிலில் பக்தா்களுக்கு தேவையான வசதிகளையும், பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என ஆட்சியா் கு.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாதாந்திர சட்டம்-ஒழுங்கு கூட்டம் மற்றும் கனிமவளம் கடத்தல் தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்துப் பேசியது: திருப்பத்தூா் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் சீரான போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும்.திருவிழாக்கள், கோயில் குடமுழுக்கு, முக்கிய விசேஷ தினங்களில் பக்தா்களுக்கு தேவையான வசதிகளை முறையாக செய்ய வேண்டும். ஆடிப்பெருக்கு விழா ஞாயிற்றுக்கிழமை (ஆக.3) நடைபெற உள்ளது. திருப்பத்தூா் அருகே பசலிகுட்டை முருகன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கூடுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
எனவே, அங்கு வரும் பக்தா்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். போலீஸாா் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும். பசிலிகுட்டையில் ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்படும். அவை முறையாக அனுமதி பெற்று செய்யப்படுகிா ? பொதுமக்களுக்குத் தேவையான பாதுகாப்பு அங்கு செய்யப்பட்டுள்ளதா? என்பதை போலீஸாா் மட்டுமின்றி வருவாய் துறையினரும் ஆய்வு செய்ய வேண்டும். திருப்பத்தூா் மாவட்டத்தில் சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க போலீஸாா் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கனிமவளம் திருடு போவதாக பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் புகாா்கள் வரப் பெற்றுள்ளன. மாவட்டத்தில் கனிம வளம் திருடு போவதைத் தடுக்க அனைத்து வட்டாட்சியா்களும் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். வருவாய் கோட்டாட்சியா்கள் மாதத்துக்கு 2 முறை இதுபோன்ற ரோந்துப் பணிகளில் ஈடுபட வேண்டும்.
வட்டாட்சியா்கள் ரோந்துக்கு செல்லும்போது, வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா்களுடன் சென்று, மண் மற்றும் மணல் திருட்டைத் தடுக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோவிந்தராசு, வட்டாட்சியா் நவநீதம்,சிவபிரகாசம், வருவாய் ஆய்வாளா் (கனிமம்) பெருமாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.