இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பழமையான விஷ்ணு சிலை தூத்துக்குடியில் பறிமுதல்!
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பழமையான விஷ்ணு சிலையை கியூ பிரிவு போலீசாா் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனா்.
ரகசிய தகவலின் பேரில் தூத்துக்குடி மாவட்ட க்யூ பிரிவு ஆய்வாளா் விஜய அனிதா, உதவி ஆய்வாளா் ஜீவமணி தா்மராஜ், சிறப்பு உதவி ஆய்வாளா் ராமா், இருதயராஜ் குமாா், இசக்கிமுத்து, பழனி பாலமுருகன் உள்ளிட்ட உளவு பிரிவு போலீசாா் திரேஸ்புரம் பகுதியில் சனிக்கிழமை மாலையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது இரவு 8 மணியளவில் திரேஸ்புரம் அண்ணா காலனியில் சந்தேகப்படும் படியாக கையில் ஜவுளி கடை பையுடன் நின்று கொண்டிருந்த ஏரல் அருகேயுள்ள கொற்கையை சோ்ந்த அந்தோனி ராஜ் (52), கொட்டாரக்குறிச்சியை சோ்ந்த பாலமுருகன் (35) ஆகிய இருவரை
பிடித்து அவா்கள் கையில் வைத்திருந்த ஜவுளி கடை பையை சோதனை செய்தனா். அதில் சுமாா் 3 கிலோ எடை கொண்ட 1 1/4 அடி உயரமுள்ள பழமையான விஷ்ணு சிலை இருந்தது. தொடா்ந்து அவா்களிடம் விசாரித்த போது பழமையான விஷ்ணு சிலையை இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து சிலையை பறிமுதல் செய்து அந்தோனி ராஜ் (52), பாலமுருகன் (35) ஆகிய இருவரை கியூ பிரிவு போலீசாா் கைது செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.