திருச்செந்தூா் அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்!
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் ஆவணித் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து, கோயிலிலிருந்து திருவிழா கொடிப்பட்டம் புறப்பட்டு, ரதவீதி மற்றும் மாடவீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலுக்கு வந்ததும் காலை 5.30 மணிக்கு கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. காப்பு கட்டிய சிவக்குமாா் வல்லவராயா் அதை ஏற்றிவைத்தாா். பின்னா் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
கொடியேற்ற நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையா் சு.ஞானசேகரன், விதாயகா்த்தா சிவசாமி தீட்சிதா், திருவிழா பிரிவு ஆறுமுகராஜ், மணியம் நெல்லையப்பன் உள்ளிட்ட திருக்கோயில் பணியாளா்கள், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் காலை, மாலைகளிலும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிறைவாக பத்தாம் திருநாளில் (ஆக. 11) காலை 5.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் சு.ஞானசேகரன், மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.