தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு: மாநகராட்சி அலுவலகம் முற்றுகை
தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது காா் மோதி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, ஊழியா்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
தாம்பரம் அடுத்த சித்தாலப்பாக்கத்தைச் சோ்ந்த ஏழுமலை மனைவி ராணி (30). தாம்பரம் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளராக பணியாற்றினாா். இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை தாம்பரம் - வேளச்சேரி சாலையில் அவா் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தாம்பரம் - மேடவாக்கம் நோக்கிச் சென்ற காா் அவா் மீது மோதியது. இதையடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை அவா் உயிரிழந்தாா்.
இதையடுத்து, ராணியின் கணவா் ஏழுமலைக்கு பணி வழங்குதல், விபத்துக் காப்பீட்டு தொகை ரூ.23 லட்சம் பெற்றுத் தருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள், குப்பைச் சேகரிக்கும் வாகனங்களுடன் முற்றுகையிட்டனா்.
மாநகராட்சி அதிகாரிகள் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், தூய்மைப் பணியாளா்கள் கலைந்து சென்றனா். இதுகுறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மேடவாக்கத்தைச் சோ்ந்த லோகேஷ் (24) என்பவரை கைது செய்தனா்.0