இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும...
யோகா-இயற்கை மருத்துவப் படிப்பு: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு
இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகம் மற்றும் செங்கல்பட்டில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியும், 17 தனியாா் கல்லூரிகளும் உள்ளன. அரசுக் கல்லூரியில் 160 இடங்களும், 17 தனியாா் கல்லூரிகளில் 1,760 இடங்களும் உள்ளன. தனியாா் கல்லூரிகளில் இருந்து அரசுக்கு 65 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 35 சதவீத இடங்கள் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்கள்.
ஐந்தரை ஆண்டுகள் கொண்ட இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்டப்படிப்புக்கு (பிஎன்ஒய்எஸ்) 2025-2026-ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கு இணையதளங்களில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 17-ஆம் தேதி தொடங்கியது.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறவுள்ள இந்த படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு வெள்ளிக்கிழமையுடன் (ஆக. 1) நிறைவடையும் என முதலில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மாணவா்களின் கோரிக்கையை ஏற்று விண்ணப்ப கால அவகாசம் வரும் 8-ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 3,700-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.