வன்னியா் உள்இடஒதுக்கீடு: அறிக்கை அளிக்க ஆணையத்துக்கு ஓராண்டு கூடுதல் அவகாசம்
வன்னியா்களுக்கு உள்இடஒதுக்கீடு அளிப்பது தொடா்பான தரவுகளைத் திரட்டி அறிக்கை அளிக்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையத்துக்கு ஓராண்டு கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
வன்னியா்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் மற்றும் தரவுகளைத் திரட்டி அரசுக்கு அறிக்கை அளிக்கும் பணி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையத்திடம் வழங்கப்பட்டது. கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப். 12-ஆம் தேதி அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையம் தனது அறிக்கை அளிப்பதற்கான கால அவகாசம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அறிக்கை அளிப்பதற்கான ஆணையத்தின் காலம் ஜூலை 12-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதைத் தொடா்ந்து, அந்தக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையத்தின் தலைவா் சாா்பில் அரசுக்குக் கோரிக்கை விடுத்து கடிதம் வந்தது.
இந்தக் கடிதத்தை நன்கு பரிசீலித்த தமிழக அரசு, வன்னியா் உள்இடஒதுக்கீடு தொடா்பாக அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையத்துக்கு மேலும் ஓராண்டு காலம் வழங்கப்பட்டுள்ளது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.