`இது விஜய்க்கு எழுதிய கதை’ - சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கும் `கிழக்கு சீமையிலே’ ...
நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை மீது நம்பிக்கை இல்லை! - உச்சநீதிமன்றம்
நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை மீது நம்பிக்கை ஏற்படவில்லை என்றும் அவர் நீதிபதி பதவியில் நீடிப்பது குறித்து நாடாளுமன்றம் முடிவு செய்யப்பட்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் இருந்து கடந்த மார்ச் மாதம் கட்டுக்கட்டாக எரிந்த நிலையில் பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் தனது பதவி நீக்கம் மற்றும் உள் விசாரணைக்குழுவுக்கு எதிராக யஷ்வந்த் வர்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
கடந்த திங்கள்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், 'விசாரணைக் குழுவின் விசாரணை நிறைவடைந்து, அதன் அறிக்கை வெளியிடப்படும் வரை இந்த மனுவை தாக்கல் செய்யாமல் காத்திருந்தது ஏன்?' என நீதிபதி யஷ்வந்த் வா்மாவிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பிய உச்ச நீதிமன்றம், மனுவை முறையாகத் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியது.
தொடர்ந்து இன்று(புதன்கிழமை) நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, ஏ.ஜி.மாசி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி தத்தா, "உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒன்றும் தபால் நிலையம் அல்ல. நீதித்துறையின் தலைவர் என்ற முறையில் அவருக்கு நாட்டிற்கான கடமைகள் இருக்கின்றன. தவறான நடத்தை தொடர்பான விவகாரங்கள் வரும்போது அவற்றை குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு அனுப்ப வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது" என்று கூறினார்.
நீங்கள் ஏற்கெனவே முடிவு எடுத்துவிட்டதாக யஷ்வந்த் வர்மா தரப்பு வழக்க்கறிஞர் கபில் சிபல் கூற, அதற்கு நீதிபதி தத்தா, "நாங்கள் ஏற்கெனவே முடிவை எடுத்திருந்தால் நாங்கள் அமைதியாக இருந்து உங்களை வாதிட அனுமதித்திருப்போம். தீர்ப்பினையும் வழங்கியிருப்போம். ஆனால் அது நியாயமான நீதி அல்ல. அதனால்தான் நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். சட்டத்தை நாங்கள் பின்பற்ற வேண்டும்" என்று கூறினார்.
மேலும் "நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை மீது நம்பிக்கை ஏற்படவில்லை. உங்கள் நடத்தை பலவற்றை சொல்கிறது. நீங்கள் ஒன்றைக் கண்டுபிடிக்க காத்திருந்து அது கிடைத்தவுடன் இங்கு வந்திருக்கிறீர்கள். நீதிபதி பதவியில் நீடிக்க வேண்டுமா என்பதை நாடாளுமன்றம் முடிவு செய்யட்டும்" என்று கூறி வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
வழக்கு விவரம்
தில்லி உயா் நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அவரது அரசு இல்லத்தில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னா் அந்தப் பணம் மாயமானது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட 3 நீதிபதிகள் அடங்கிய குழு, யஷ்வந்த் வா்மா இல்லத்தில் பணம் கண்டறியப்பட்டது உண்மை என்று அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அறிக்கை சமா்ப்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்ய பரிந்துரைத்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோருக்கு சஞ்சீவ் கன்னா கடிதம் எழுதினாா்.
இந்த சா்ச்சையைத் தொடா்ந்து, நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவியிலிருந்து நீக்க 208 எம்.பி.க்கள் சாா்பில் நாடாளுமன்றத்தில் அண்மையில் நோட்டீஸ் சமா்ப்பிக்கப்பட்டது.
இதனிடையே, ‘உச்சநீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழுவின் அறிக்கை செல்லுபடியாகாது என்று அறிவித்து, தன்னைப் பதவிநீக்கம் செய்வதற்கான பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும்’ எனக் கோரி, நீதிபதி யஷ்வந்த் வா்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, ஏ.ஜி.மாசி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வருகிறது.