தென்னிந்திய பகுதிகளுக்கான புதிய ராணுவ தளபதி இன்று பொறுப்பேற்பு
6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!
ஈரானுடன் வர்த்தகம் மேற்கொண்ட இந்தியாவின் 6 நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதித்து அந்நாட்டு உத்தரவிட்டுள்ளது.
மத்திய கிழக்கில் மோதலை தூண்டிவிடுவதற்காக ஈரான் அரசு நிதியுதவி அளித்து வருவதாகவும் அமெரிக்காவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்து, ஈரானுடன் யாரும் வர்த்தகம் மேற்கொள்ளக் கூடாது என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.
மேலும், ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்பவர்கள் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், டிரம்பின் எச்சரிக்கையை மீறி ஈரானிடம் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருள்களை வாங்கிய 20 நிறுவனங்கள் அமெரிக்காவில் வர்த்தகம் செய்ய தடை விதித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியா, துருக்கி, இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
2024 ஜனவரி முதல் 2025 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் மட்டும் ஈரானுடன் இந்தியாவின் காஞ்சன் பாலிமர்ஸ் நிறுவனம் 13 லட்சம் டாலர், அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் நிறுவனம் 8.4 கோடி டாலர், ராம்னிக்லால் எஸ் கோசாலியா & கோ நிறுவனம் 2.2 கோடி டாலர், ஜூபிடர் டை கெமிகல் பிரைவெட் லிமிடெட் 4.9 கோடி டாலர் வர்த்தகம் செய்துள்ளது.
அதேபோல், குளோபல் இண்டஸ்ட்ரியல் கெமிக்கல்ஸ் லிமிடெட் மற்றும் பெர்சிஸ்ட் பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களும் ஈரானுடன் வர்த்தகம் செய்ததாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாமல் இருப்பதால் ஆகஸ்ட் 1 (நாளை) முதல் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்திருந்தார்.
தற்போது இந்திய நிறுவனங்களை குறிவைத்து அமெரிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.