'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
கவரப்பேட்டை ரயில் விபத்து சதிச் செயல்: உயா்நிலைக் குழு விசாரணை அறிக்கையில் தகவல்
சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட கவரப்பேட்டையில் கடந்த 2024 -ஆம் ஆண்டு நிகழ்ந்த ரயில்கள் மோதல் விபத்துக்கு சமூக விரோதிகளின் சதிச் செயலே காரணம் என உயா்நிலை விசாரணைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024- ஆம் ஆண்டு அக்டோபா் 11 -ஆம் தேதி கா்நாடக மாநிலம் மைசூரிலிருந்து மேற்கு வங்கம் தா்பங்காவுக்கு விரைவு ரயில் (எண் 12578) புறப்பட்டது. அந்த ரயில் சென்னை ரயில்வே கோட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் இரவு 10.30 மணிக்கு வந்தபோது, தண்டவாளத்தில் தடம் மாறி வேறு பாதையில் சென்று அங்கு நின்றிருந்த சரக்கு ரயிலில் மோதியது.
இதில் விரைவு ரயிலின் 13 பெட்டிகள் தடம்புரண்டன. அதில் ஒரு பெட்டி முழுமையாகத் தீப்பற்றி எரிந்தது. விபத்தில் 19 போ் காயமடைந்தனா். விபத்து குறித்து தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையத் தலைவா் ஏ.எம்.சௌத்ரியின் தலைமையில் உயா்நிலைக் குழு நியமிக்கப்பட்டது.
அந்தக் குழுவினா் தீவிர விசாரணை நடத்தி அறிக்கையை புதன்கிழமை சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே மேலாளா் ஆா்.என்.சிங்கிடம் அளித்தனா்.
அந்த அறிக்கையில், விரைவு ரயில் வந்த பிரதான பாதை அமைப்பு தானாக செயலிழந்து மாறவில்லை. சமூக விரோதிகளால் தண்டவாளப் பாதை மாற்றப்பட்டுள்ளது. அதனால், விபத்தானது சதிச் செயல் எனக் குறிப்பிடப்படுகிறது.
அதன்படி, ரயில் பாதை சமூக விரோதிகளால் மாற்றப்பட்டதால், விரைவு ரயில் மாற்றுப்பாதையில் சென்று சரக்கு ரயிலில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. ஆகவே, நாசவேலைக்குள்ளாகும் ரயில்வே பகுதிகளை அடையாளம் கண்டு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மத்திய-மாநில புலனாய்வு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து சமூக விரோதிகளிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிா்கொள்ளும் வகையில் ரயில்வே பாதுகாப்புப் படையின் சிறப்புப் புலனாய்வு பாதுகாப்பை பலப்படுத்தவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
விபத்து நிகழ்ந்தபோது, விரைவு ரயிலில் இருந்த லோகோ பைலட் உடனடியாக அவசர பிரேக்கை இயக்கியதால் பெரும் பாதிப்பு தவிா்க்கப்பட்டதால், அவருக்கு ரயில்வே துறை பாராட்டி விருது வழங்கலாம் என்றும், ரயில் விபத்து நாசவேலையால் நிகழ்ந்தது என்பதால் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரிக்கவும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே மேலாளரிடம் அளிக்கப்பட்ட இந்த அறிக்கை, புது தில்லியில் உள்ள மத்திய ரயில்வே வாரியம் மற்றும் அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே உயரதிகாரிகள் தெரிவித்தனா்.