விவசாய கிணற்றில் விழுந்த காட்டு யானை பலி
கோவை சோலைப்படுகை பகுதியில் விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த காட்டு யானையை போளுவாம்பட்டி வனத்துறையினர் மீட்டனர்.
கோவை மாவட்டம் சாடிவயல் அடுத்த சோலைப்படுகை பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த காட்டு யானைகள் அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. இதனைக் கண்ட விவசாயிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலை அடுத்து விரைந்து வந்த வனத்துறையினர் யானைகளை வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இரண்டு யானைகள் வனத்திற்குள் சென்ற நிலையில் ஒரு யானை மட்டும் வழி தெரியாமல் நிர்மலா என்பவருக்கு சொந்தமான 20 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் விழுந்தது.

அந்த கிணற்றில் அதிகயளவில் நீர் இருந்ததால் யானை நீரில் மூழ்கி உயிரிழந்தது.
இதையடுத்து யானையை மீட்பதற்காக பொக்லைன் கனரக வாகனம் கொண்டுவரப்பட்டு மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினரின் சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் காட்டு யானையின் உடல் மீட்கப்பட்டு உடல்கூறாய்வுக்காக கோவை குற்றாலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
உயிரிழந்த யானைக்கு சுமார் 35 வயது இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
விவசாய கிணற்றில் விழுந்து காட்டு யானை உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.