US Tariff: இந்தியா மீது 25% வரி விதித்த Trump; ரஷ்யாவிடம் எண்ணெய், ஆயுதம் வாங்குவதால் அபராதம்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகஸ்ட் 1 முதல் இந்தியா 25% வரி கட்ட வேண்டும் என அறிவித்துள்ளார். அத்துடன் ரஷ்யாவுடன் எரிபொருள் மற்றும் ஆயுத வர்த்தகம் மேற்கொள்வதனால் கூடுதல் அபராதமும் விதித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 2ம் தேதி நடைபெற்ற விடுதலை நாள் மாநாட்டில் ட்ரம்ப் பல்வேறு நாடுகள் மீது பெரிய அளவிலான வரி விதிப்புகளை அறிவித்தார். பின்னர் அவற்றின் மீது பேரம் பேசி இறுதியான வரியை அறிவித்து வருகிறார்.
அந்த வகையில் இந்தியாமீது அவர் முதலில் கூறிய 26% வரியிலிருந்து ஒரு விழுக்காட்டைக் குறைத்து 25% -ஆக அறிவித்துள்ளார்.
Trump சொன்ன காரணம்

இதுகுறித்த அவரது ட்ரூத் வலைதள பதிவில், "நினைவில் கொள்ளுங்கள், இந்தியா பல ஆண்டுகளாக எங்கள் நண்பராக இருந்தாலும் அவர்களுடன் மிகச் சிறிய அளவிலேயே வணிகம் செய்துள்ளோம், காரணம் அவர்களின் கட்டணங்கள் உலகிலேயே மிக அதிகமான ஒன்றாக இருக்கின்றன. மேலும் பணத்தைக் கடந்து அவர்கள் எந்த நாட்டிலும் இல்லாத அளவு கடுமையான அருவருக்கத்தக்க வர்த்தக தடைகளைக் கொண்டுள்ளனர்." எனக் கூறியிருக்கிறார் ட்ரம்ப்.
"அத்துடன் அவர்கள் ரஷ்யாவிலிருந்து பெரிய அளவில் ஆயுதங்களை வாங்கியிருக்கின்றனர். உலகமே ரஷ்யா உக்ரைனில் கொலை செய்வதை நிறுத்த வேண்டும் என முயன்றபோது, அவர்களும் (இந்தியா), சீனாவும் ரஷ்யாவிலிருந்து அதிகம் எரிபொருள் இறக்குமதி செய்யும் நாடுகளாக இருந்தன. - இதெல்லாம் நல்லது இல்லை.
எனவே இந்தியா ஆகஸ்ட் 1 முதல், 25% கட்டணங்களையும் மேற்கண்ட பிரச்னைகளுக்காக கூடுதல் அபராதத்தையும் கட்ட வேண்டும்." என்றும் கூறியுள்ளார்.

இந்த கட்டணங்கள் மேலதிக தாமதமில்லாமல் ஆகஸ்ட் 1 முதல் நிச்சயமாக அமலுக்கு வரும் என்று அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்துள்ளார். கூடுதல் அபராதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
மோடியின் அமெரிக்க பயணத்தின் போது ட்ரம்ப் இருதரப்பு வர்த்தக ஒப்பந்த்தைத்தை ஏற்படுத்துவதற்கான நோக்கம் இருப்பதாக அறிவித்தார். ஆனால் இரண்டு நாடுகளும் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்க முடியவில்லை.
இதுவரை கட்டணங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக இரண்டு நாட்டு அதிகாரிகளும் 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிடுகிறது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிப்பதன்படி, ட்ரம்ப் ஆகஸ்ட் 1ம் தேதி கொண்டுவரும் கட்டணங்கள் தற்காலிகமானதாகவே இருக்குமென்றும், வர்த்தக பேச்சுவார்த்தைகள் முடிந்த பிறகு மாற்றம் ஏற்படும் என்றும் இந்திய அதிகாரிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.