நட்சத்திர பலன்கள்: ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 7 வரை #VikatanPhotoCards
வீழ்ச்சியடைந்த பொருளாதார நாடு இந்தியா: டிரம்ப் கடும் விமர்சனம்
புது தில்லி: வீழ்ச்சியடைந்த பொருளாதார நாடு என்று இந்தியாவை கடுமையாக விமர்சித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாத நிலையில், இந்திய பொருள்களுக்கு அமெரிக்காவில் 25 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், ரஷியாவுடன் இணைந்து வர்த்தகம் மேற்கொள்வதற்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அறிவித்திருந்தார்.
இந்தியாவுக்கான வரி விதிப்பு முறை ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று தன்னுடைய ட்ரூத் எனப்படும் சமூக வலைத்தளத்தில், டொனாலட் டிரம்ப் இந்தியா - ரஷியா குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
அதில், ரஷியாவுடன் சேர்ந்து இந்தியா என்ன செய்தாலும் அதுபற்றி எனக்குக் கவலையில்லை. இந்தியா, ரஷியாவுடன் சேர்ந்து வர்த்தகம் செய்தால் வீழ்ந்து கிடக்கும் அவர்களது பொருளாதாரம் மேலும் வீழத்தான் செய்யும்.
வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை இந்தியா, ரஷியா மேலும் வீழ்ச்சிக்குக் கொண்டு செல்கிறார்கள். நாங்கள் இந்தியாவுடன் இணைந்து மிகக் குறைவான வணிகத்தையே மேற்கொள்கிறோம். அவர்களது கட்டணம் மிக அதிகம். இந்த உலகிலேயே, பிற நாடுகளுடன் ஒப்பிட்டால் இந்தியாவில் கட்டணம் அதிகம். அதுபோல, ரஷியாவும் அமெரிக்காவும் இணைந்து வணிகம் மேற்கொள்வதில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பதிவிட்டிருப்பதாவது, அந்த வகையிலேயே அதை அப்படியே விட்டுவிடுவோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
முன்னதாக, ரஷிய முன்னாள் அதிபர் மெத்வேதேவ் பேசுகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷியாவுடன் விளையாடுகிறார். இதுபோன்ற நடவடிக்கைகள் ரஷியா - அமெரிக்கா இடையே போரைத்தான் ஏற்படுத்தும் என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் அனைத்துக்கும் 25 சதவீத வரி விதிப்பு ஆகஸ்ட் ஒன்று முதல் நடைமுறைக்கு வரும் என்றும், அளவு குறிப்பிடப்படாத அபராதமும் விதிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார் டிரம்ப்.
இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை ஐந்தாம் கட்டத்தை எட்டியிருக்கிறது. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க அதிகாரிகள் இந்த மாதம் நான்காவது வாரத்தில் இந்தியா வரவிருக்கிறார்கள். மிக மோசமான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதை விட, 25 சதவீத வரி விதிப்பே மேலானது என இந்தியா அதிகாரிகள் கூறியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.