Aamir Khan: ``திரையரங்க வியாபாரத்தைப் பாதுகாக்கவே பொய் சொன்னேன்!'' - மன்னிப்புக்...
என் மனம் கவர்ந்த அறம் காக்கும் தெய்வம் பறம்பு தலைவன் பாரி | #என்னுள்வேள்பாரி
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். வேள்பாரி படிப்பதற்கு முன் எனக்கு இயற்கை என்றால் சாலை ஓரமாக இருக்கும் மரங்களும், எங்கள் வீட்டு மாடியில் நான் வளர்க்கும் செடிகள் மட்டும் தான் என்று இருந்தேன், வேள்பாரி படித்து முடித்த பிறகு மலை தேசங்களை நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்.
பாரி வருடத்தில் ஒரு முறையாவது உப்பரைக்கு சென்று வருவது போல் நானும் விடுமுறை நாட்களை மலைதேசங்களில் தங்கி மலைகளின் அதிசயங்களையும், அழகையும் ரசிக்க எனக்கு ஆசை வர காரணம் வீரயுக நாயகன் வேள்பாரி புத்தகம்.
வேள்பாரியை பற்றிய கபிலரின் மன மாற்றமே இந்த வீரயுக நாயகன் வேள்பாரி கதை. பாரிக்கு இயற்கை மீது அளவுகடந்த காதல், போரின் உச்சகட்டத்தில் கூட “இயற்கை நம்மை ஒருபோதும் கைவிடாது” என்று நம்பினான் பாரி, இயற்கையும் பாரியை கைவிடவில்லை.

மூவேந்தர்களால் பாதிக்கப்பட்ட 16 குடிகளுக்கும் அடைக்கலம் தந்தது கடலை விட பெரிதான பாரியின் கருணை.
பொதினிமலையில் பாரிக்கும் ஆதினிக்கும் இடம் தந்த வெண்சாரைப்பாம்பை போல் முல்லைக்கொடிக்கு தன் தேரை தந்த வள்ளல் பாரி என்னை மிகவும் கவர்ந்தான்.
பறம்பு வீரர்கள் ஒருபோதும் துரோகம் செய்யமாட்டார்கள் என்று நிரூபிக்க தன் வயிற்றை கடுவன் கிழித்து உயிரைவிடும் காட்சி என்னை பாதித்தது.
எதிரிகளை துவம்சம் செய்து எதிரி கூடாரத்தில் சென்று நீலனை மீட்ட பிறகும் போர் அறத்தை மீறாமல் நீலனை மீண்டும் அங்கேயே விட்டுவிட்டு ஆயுதம் இல்லாமல் நிற்கும் மாவீரன் இராவதனை அறம் மீறி கொல்லும் காட்சி என்னை பாதித்தது.
பாரியை காக்க பொற்சுவை, பறம்பை காக்க தேக்கன், தன் வீரர்கள் அறம் தவறியதற்காக திசைவேழர் இவர்கள் செய்த உயிர் தியாகம் என்னை பாதித்தது.
“உன்னில் நான் இருக்கிறேன்” என்று சொல்லும் முருகன் வள்ளி காதலும், சிறகு நாவல் பழம் சூழ “காதல் தலைவனுக்கு காதலில் அறியாமை அழகு” என்று சொல்லும் ஆதினி பாரியின் காதலும், நீலன் மைலா மற்றும் அங்கவை உதிரன் காதல் காட்சிகளும் அழகோ அழகு.

தேக்கன் தற்கொலை செய்துகொண்டது வரை படித்து முடித்ததும் அலுவலக பணிகள் காரணமாக என்னால் ஒரு வாரத்திற்கு வேள்பாரி புத்தகத்தை தொடர்ந்து பிடிக்க முடியவில்லை. என் மனம் எல்லாம் அடுத்து என்ன நடக்கும், பாரி எப்படி போரிடப்போகிறான், பாரியின் தாக்குதல் எப்படி இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
அதே ஆர்வத்தோடு ஒருவாரம் கழித்து மீண்டும் வேள்பாரியை படிக்கத்தொடங்கினேன் சுருள் அம்பு தாக்குதல் தொடங்க, எரிமதம் கொண்ட யானைகள் ஓடி வர, பாரி எருள் தடி வாங்கி எதிரிகளை சின்னாபின்னம் செய்து இறுதியாக நீலனை மீட்டு பாரி யானை மீது வரும் காட்சிகள் படிக்கும்போது எனக்கு மெய்சிலிர்த்து விட்டது.
காலம்பனும் பாரியும் காளைமாடுகளை போல் சண்டை போட்டுக்கொண்டிருக்க, தன்னுடன் சண்டை போடுவது பாரி என்று தெரிந்ததும் காலம்பன் பாரியை தலைவணங்கி மன்னிப்புக்கேட்பதும். பாம்பின் தலையை நசுக்குவதுபோல் பாரி பாண்டிய நாட்டின் மிகப்பெரிய துறைமுகமான வைப்பூர் துறைமுகத்தை அழித்தது வியப்பான காட்சிகள்.
எதிரி நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பொற்சுவைக்கும், திசைவேழருக்கும் இறுதி மரியாதையை செய்துவைக்கும் பாரியின் அறம் வியக்கவைக்கிறது.
12 குல மக்களும் நடனமாடி தங்கள் கதையை சொல்லும் கொற்றவை கூத்து மனதை உருக்கும் காட்சிகள். எதிரி கோட்டையில் குத்துயிரும் குலையுயிருமாக இருந்தாலும் நீலனுக்கு பாரிமீது இருந்த நம்பிக்கை ஆச்சரியம்.
பாரியை பற்றி தெரிந்துகொள்ள வந்த கபிலர் பாரியின் வீரம், கருணை, அறம் தெரிந்து போரில் பாரி பக்கம் நின்று, இறுதியாக “அறம் காக்கும் தெய்வம் எம்மையும், எம் மக்களையும், எம் நிலத்தை ஆளட்டும்” என்று வாழ்த்தும் காட்சி பாரி நம் மனதில் உயர்ந்து நிற்கிறான்.
வேல்பாரி படிக்கும்பொழுது ஆசிரியரின் எழுத்துக்கள் உயிர்ப்பெற்று நம் கண்முன் காட்சிகளாக விரிகின்றன. கபிலரோடு சேர்ந்து நம்மையும் பறம்பு நாட்டில் பயணம் செய்ய வாய்த்த ஆசிரியர் சு வெங்கடேசன் அவர்களுக்கு அறுபதாங்கோழி விருந்து படைத்து, எழுதிய கைகளுக்கு முத்தமிட்டு, தலைவணங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
- வீரா
வாசகர்களாகிய உங்களுக்கு வேள்பாரி எவ்வளவு பிடிக்கும்?, 'வீரயுக நாயகன் வேள்பாரி' நாவலில் உங்களைக் கவர்ந்த கதாபாத்திரம் எது?, உங்கள் மனதை அதிகம் பாதித்த காட்சி எது?, காதல், வீரம், ஓவியம், மொழி வளம், தமிழர் அறம், மாண்பு இப்படி பல அற்புதங்கள் அடங்கிய இந்தப் படைப்பில் உங்களுக்குப் பிடித்த விஷயம் என்ன?
உங்கள் கட்டுரை 600-800 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். உங்களின் சொந்த படைப்பாக இருக்க வேண்டும். உங்களது கட்டுரையை my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
நினைவில் கொள்க:
ஆசிரியர் குழுவால் தேர்வு செய்யப்படும் சிறந்த கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கிறது.
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
உங்கள் படைப்பைத் திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.