பயங்கரவாதம் ஒருபோதும் காவி நிறத்தில் இருந்ததில்லை, இனியும் இருக்காது: ஃபட்னவீஸ்
முன் எப்பொழுதும் இல்லாத தனி லட்சணம் அவர் முகத்தில் அன்று கண்டேன்! | #ஆஹாகல்யாணம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
பின்குறிப்புடன் ஆரம்பிக்க விரும்புகிறேன்..
என் திருமண அனுபவங்களை ஏற்கனவே மைவிகடனில் மூன்று பகுதிகளாகப் பகிர்ந்துள்ளேன். திருமண நாளைப் பற்றி யோசிக்கும் பொழுது இன்னும் இன்னும் பல சுவாராஸ்யமான நிகழ்வுகள் நினைவிற்கு வருகின்றன. திருமணத்திற்கு முன் இருவரும் பல விஷயங்கள் பேசி இருந்தாலும் திருமணத்திற்குப் பின் பல சவால்கள் இருக்கத்தான் செய்கின்றன.
அதற்குப் பின்னான வாழ்க்கையில் பூரித்து மகிழ்ந்து பேச அவ்வளவாக நேரம் கிடைப்பதில்லை. ஆனால் திருமணம் நிச்சயமானதில் இருந்து திருமணம் வரை இருந்த பூரிப்பு தனிச் சுவை கொண்டவை. அதைப் பற்றிய சிறிய அனுபவ பகிர்வு.

முதல் சந்திப்பு..
சாலையின் இருபுறமும் மரங்கள் மெல்ல அசைந்தன. காற்றின் வேகம் அதிகரித்தது.
போட்டித் தேர்வு முடிந்து வெளியில் வந்த என்னை அழைத்துச் செல்ல இரு சக்கர வாகனத்தில் காத்திருந்தான் என்னவன். ஏற்கனவே வெட்கத்தில் இருந்த எனக்கு காற்று உரசியதில் சிலிர்த்துப் போனேன்.
அவன் அருகில் போய் நின்றேன். என் கையில் இருந்த பையை வாங்கிக் கொண்டான்.
"வண்டில ஏறு" மெல்லிய குரலில் கூறினான்.
வண்டியில் ஏற முயன்றேன். ஏதோ ஒன்று தடுத்தது. அச்சம், மடம், நாணம் மற்றும் பயிர்ப்பு இவற்றில் ஏதாவதா தெரியவில்லை.
மீண்டும் வண்டியில் ஏற முயன்றேன். அவன் முகத்தை ஒரு முறை பார்த்தேன். நேற்று வரை நண்பனாக இருந்தான். அலைபேசியில் நடந்த நேற்றைய உரையாடலில் இருவருக்கும் இருவரையும் பிடித்திருக்கிறது என்பதை சொல்லிவிட்டோம்.
காதலர்களாக இருவரும் சந்திக்கும் முதல் சந்திப்பு. அவனை எப்படிப் பார்ப்பது எப்படி அழைப்பது எதுவும் புரியவில்லை. ஒரே நாளில் எப்படி எல்லாவற்றையும் மாற்றிக் கொள்வது?
இரண்டு நிமிடங்கள் சென்றன. அவனும் எதுவும் பேசாமல் காத்திருந்தான். அவ்வப்போது என் கண்களைப் பார்த்துவிட்டு தலை திருப்பினான்.
வண்டியில் ஏறி அமர்ந்தேன்.
பல கேள்விகள் கேட்க வேண்டும் பலதும் பேச வேண்டும் எனத் தோன்றினாலும் வார்த்தை வரவில்லை.
'இவன் தான் வாழ்க்கை முழுவதும் என்னுடன் பயணக்கிப் போகிறவனா?' மீண்டும் என்னிடம் கேள்வி எழுப்பிக் கொண்டேன்.
இப்படி ஆரம்பித்த காதல் பயணம்.
இரண்டு வருடங்கள் கழித்து வீட்டில் சொல்லி இருவர் வீட்டிலும் சம்மதம் வாங்கினோம்.
முதலில் காதல் என்றதும் மறுத்தார்கள்.
"பையன் நல்லப் பையனா தெரியுதா.. என்னன்னு பேசி தான் பாக்கலாமா" என்று அம்மா அப்பாவிடம் கூறும் போது மகிழ்ச்சி பொங்க அப்பாவின் பதிலுக்கு காத்திருந்தேன்.
அப்பாவும் பேசிவிட்டு என்னவரை பார்த்துவிட்டு சம்மதம் கூற வாழ்வையே வெற்றிக் கண்ட மகிழ்ச்சி.
உறவினர்கள் சூழ பெண் பார்த்து உறுதி செய்யும் நாள்.
"இப்போ நான் என்னடி பண்ணணும்" புடவை கட்டி தயாராகி அறைக்குள் காத்திருந்த நான் அக்காவிடம் கேட்டேன்.
"படுத்து தூங்கு" கிண்டலாகக் கூறினாள்.
"சொல்லுடி"
"நீ எதுவும் பண்ண வேணாம்.. சும்மா வந்து நில்லு.. யாராவது பார்த்து சிரிச்சா லைட்டா சிரி.. பெரியவங்களுக்கு வணக்கம் சொல்லு.. எல்லாரையும் வாங்கன்னு சொல்லி கும்புடு" என்றாள்.
தயக்கத்துடனும் ஒரு வித புது உணர்வுடனும் அறையில் இருந்து வெளியில் வந்து வணக்கம் சொன்னேன்.
என்னவன் எங்கே அமர்ந்திருக்கிறான் என்பதையும் நிமிர்ந்து பார்த்த நொடியில் கண்டுகொண்டேன். முன் எப்பொழுதும் இல்லாத தனி லட்சணம் அவர் முகத்தில் அன்று கண்டேன்.
உறுதி செய்து விட்டு என்னையும் அவரையும் ( திருமணம் நிச்சயம் ஆன நொடியில் இருந்து அவர் ஆகிவிட்டார்) அருகருகே நிற்க வைத்து புகைப்படம் எடுத்தனர்.
"நெருங்கி நில்லுங்க.. சிரிங்க ரெண்டு பேரும்" என்றார் என் சித்தப்பா புகைப்படம் எடுப்பதற்காக.
என்னால் அவர் அருகில் நிற்கவே முடியவில்லை. கூச்சமாக இருந்தது.
இத்தனை நாட்களாக ஏங்கிய கனவு. இவர் தான் என் கணவர் என்று ஊருக்கு தைரியமாக சொல்ல வேண்டும் என்று. அந்நாளும் வந்தது. ஆனால் அருகில் நிற்க முடியாமல் வெட்கம் தடுக்கின்றது.
அவர் முகத்திலும் அந்த சந்தோஷத்தையும் வெட்கத்தையும் பார்த்தேன்.
காலை உணவை எங்கள் வீட்டில் அவர் சாப்பிட்டு செல்ல மதிய உணவிற்கு நாங்கள் அழைக்கப் பட்டிருந்தோம்.
"இதென்னது களக்காய்ல ஊறுகாய்யா.. நல்லாருக்கே" என்றார் எங்களுடன் அமர்ந்து சாப்பிட்ட அத்தை.
"பொண்ணுக்கு களக்காய்னா பிடிக்கும்னு ஊறுகாய்ல களக்காய் தான் வெக்கணும்னு சொல்லிட்டாரு மாப்பிள்ளை" என்றார் அவரின் அத்தை.
இதை கேட்டதும் எனக்குள் மகிழ்ச்சி பொங்க வெளியில் காட்டிக் கொள்ளாமல் ரகசியமாய் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன்.
இனிமே பொண்ணுக்கு பிடித்தது தான் நம்ம எல்லாம் சாப்பிட போறோம் என்று உறவினர்கள் விளையாட்டாய் கேலி செய்ய எனக்கு மேலும் சங்கடமாய் இருந்தது.
நானும் ஊறுகாயை எடுத்து சாப்பிட்டேன். என்றோ ஒரு நாள் தள்ளு வண்டிக் கடையில் நின்று வாங்கிச் சாப்பிட்டதை நினைவில் வைத்து இன்று வாங்கி வந்திருக்கிறாரா.. இப்படிப்பட்ட சிறு சிறு விஷயங்களில் இருக்கும் காதல் எவ்வளவு ரம்மியாக உள்ளது.
நிச்சயத்திற்குப் பின்னான உரையாடல்கள்.. காதல் திருமணத்தில் முன்பே நாங்கள் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாலும் இனி பெற்றோருக்குத் தெரிந்தே அலைபேசியில் உரையாடலாம்.
'போதும் போதும் இதுவரை யாரும் கூறா
புகழுரையே கூசுதே.. பேசாத பேச்செல்லாம் பேச பேச நிம்மதி
பேசாது போனாலும் நீ என் சங்கதி.... கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை'
முன்பு அதிகம் கேட்டிராத பாடல்கள் இப்பொழுது மிகவும் பிடித்துப் போகும்.

சூழ்நிலைக்கு ஏற்றார் போல் பாடல்கள் பிடிக்கும் அல்லவா அப்படி.
'பிள்ளை மொழி சொல்லை விட
ஒற்றை பனை கள்ளை விட
போதை தரும் காதல் வர
தொலைந்தேன் தொலைந்தேன்
தொலைந்தேன் தொலைந்தேன்'
ஒரு பாடலை ஒரே நாளில் ஐம்பது முறை கேட்க முடியுமா! கேட்டு கேட்டு உருகிப் போக வைத்தது திருமண கனவுகள்.
மணப்பெண்ணாய் சுற்றி இருப்பவர்கள் என்னைப் பார்ப்பதே தனி சந்தோசம் தரும்.
தோழிகளின் கேலி கிண்டல்கள் வெட்கத்தில் உறையச் செய்யும்.
திருமண நாள் எண்ணி காத்திருக்கையில் பல சுவரஸ்யமான சந்திப்புகள் நிகழ்ந்தன.
எங்கள் திருமணப் பத்திரிக்கை தயார் ஆனதும் அவரே நேரில் வீட்டிற்கு வந்து அப்பாவிடம் கொடுத்த தருணம் அழகானது.
அன்று நான் செய்த சட்னியை முதல் முறை சாப்பிட்டுவிட்டு நன்றாக இருக்கிறது என்றார். பிறகென்ன மனதில் பட்டாம்பூச்சிகள் பறந்தன.
அடுத்து அவர் வீட்டிற்கு நான் ஒரு முறை செல்ல நேர்ந்தது.
"அப்பா என்னை இறக்கி விட்டுட்டு போங்கப்பா.. நான் எப்படிப்பா அங்க"
"ஏதோ மோளக் காரங்க வந்திருக்காங்கன்னு சம்மந்தி அவசரமா கூப்பட்றாரு. உன்னை வீட்டுல விட்டுட்டு போனா லேட் ஆயிடும்.. நிச்சியம் ஆனப் பொண்ணு தனியா போக வேணாம். உன் வீடு தான.. பரவால்ல வா"
அவர் வீட்டிற்கு இல்லை இல்லை எங்கள் வீட்டிற்குச் செல்லப் போகிறேன்.
உள்ளே நுழைந்ததும் என் வரவை எதிர்பாராத அத்தை ஓடி வந்து என்னை வரவேற்றார்.
காபி போட சமையல் அறைக்குச் சென்றார். நானும் அவருடன் சேர்ந்து சமையல் அறைக்குப் போனேன்.
அப்பொழுது குளித்து முடித்து தலை துவட்டிக் கொண்டே வந்த என் கணவர் என்னைப் பார்த்ததும் திகைத்தார். என்ன இங்கே என்பது போல் ஆனந்த அதிர்ச்சியில் பார்த்தார்.
'நீங்க மட்டும் தான் எங்க வீட்டுக்கு வந்து ஷாக் கொடுப்பிங்களா நாங்க வரக்கூடாதா' என்று நானும் பார்வையிலேயே பதில் உரைத்தேன்.
என்னோடு அவரும் அப்பொழுது குடித்த காபி அவ்வளவு தித்திப்பானது.
நவம்பர் மாத திங்கள் அன்று மழை மேளம் கொட்ட நிகழ்ந்தது எங்கள் திருமணம். அய்யர் மந்திரம் சொல்ல உறவினர்கள் சூழ நொடியில் தாலி கட்டி முடித்தாலும் அந்த நிமிடம் தந்த நெகிழ்ச்சியும் நெற்றியில் என் கணவர் பொட்டு வைக்கும் போது ஏற்பட்ட பூரிப்பும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.
இன்றும் எந்த முகூர்த்தத்திற்குச் சென்றாலும் அலாதியான சுகம் தருகிறது எங்கள் மண நாள் நினைவுகள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.