இதுவே இறுதியாக இருக்கட்டும்! தொடரும் ஆணவக் கொலைகளின் பரிணாம வளர்ச்சி!
சாதித் தலைவர்கள் தங்களின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக தொடங்கிய ஆணவக் கொலைகள், தற்போது படித்துப் பட்டம் பெற்றவர்கள் தொடர்ந்து வருகின்றனர்.
தமிழகத்தையே உலுக்கிய கடைசி (இவையே கடைசியாக இருக்கட்டும்) இரண்டு ஆணவப் படுகொலைகளை அரங்கேற்றியது கல்லூரிப் படிப்பை முடித்த அடிப்படை கல்வியறிவு பெற்றவர்கள் என நம்பப்பட்ட பட்டதாரி இளைஞர்கள்தான்.
நெல்லை நகரப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டப் பகலில் ஐடி ஊழியரான கவின் செல்வகணேஷ் (வயது 26), பெண் சித்த மருத்துவரைக் காதலித்ததற்காக நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை குற்றவாளியைப் பிடிக்க துப்பு துலக்குவது, சேஸிங் செய்வது எனக் காவல்துறைக்கு வேலை வைக்காமல், எவ்வித பதற்றமோ குற்ற உணர்ச்சியோ இன்றி பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்துவிட்டார் கொலையாளி சுர்ஜித் (வயது 24).
கொலை செய்த சுர்ஜித், கவின் காதலித்த பெண்ணுடைய தம்பி. இவரது பெற்றோர் நெல்லை சிறப்புக் காவல்படையின் சார்பு ஆய்வாளர்களான சரவணன் - கிருஷ்ணகுமாரி தம்பதி.
கவினின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சுர்ஜித் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கவின் கொலை வழக்கில் சுர்ஜித் பெற்றோருக்கும் சம்பந்தம் இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது சிபிசிஐடிக்கு வழக்கின் விசாரணை மாற்றப்பட்டிருக்கும் நிலையில், சுர்ஜித்தின் தந்தையான உதவி ஆய்வாளர் சரவணன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலைக்கு அவர் மூளையாகச் செயல்பட்டதாக கூறப்படும் நிலையில், தீவிர விசாரணையும் நடைபெற்று வருகின்றது.
கொலையாளிகளாக பட்டதாரிகள்
முன்னதாக, சென்னை பள்ளிக்கரணையில் வசித்து வந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பிரவீண், ஷர்மிளா என்ற வேறு சாதிப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதன் காரணமாக, கடந்த 2024 பிப்ரவரி மாதம், ஷர்மிளாவின் சகோதரர் தினேஷ் (வயது 23) மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து பிரவீணைை வெட்டிப் படுகொலை செய்தனர். கணவனை இழந்த ஷர்மிளா இரு மாதங்களில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட தினேஷும் பட்டப்படிப்பை முடித்துவிட்டு சென்னையிலுள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தவர்தான்.
தமிழகத்தில் இன்றும் மறக்க முடியாதிருக்கும் ஆணவப் படுகொலைகளான விருத்தாசலம் கண்ணகி - முருகேசன் தம்பதி மற்றும் உடுமலை சங்கர் ஆணவப் படுகொலைகள் சம்பந்தப்பட்டவர்களில் ஒரு தரப்பு பெற்றோர் மற்றும் உறவினர்களால் அரங்கேற்றப்பட்டது.
நாமக்கல்லில் பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ் தனது வகுப்புத் தோழியுடன் பேசியதற்காகத் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவைத் தலைவர் யுவராஜ், தற்போது அவர் ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கிறார்.
இதனிடையே, தண்டனை விதிக்கப்பட்டுள்ள யுவராஜைப் படித்த இளைஞர்களும் கல்லூரி மாணவர்களுமே இன்னொரு பக்கம் சாதிக் காவலன்! போராளி! என்பதாக எவ்விதக் குற்றவுணர்வுமின்றிக் கொண்டாடும் பேராபத்தான சூழலும் இருக்கிறது.
கவின் கொலையிலும் இப்போது சுர்ஜித்துக்கும் குறை வைக்காமல் சமூக ஊடகங்களில் ரசிகர் பக்கங்களைத் (ஃபேன் பேஜ்களைத்) தொடங்கி இனத்தின் பெருமை எனப் பேசத் தொடங்கிவிட்டனர்.
சுர்ஜித் தடகள வீரர் என்பது கூடுதல் தகவல்.

கடந்த காலங்களில் ஆணவக் கொலைகள் பெரும்பாலும் சாதித் தலைவர்களாலும் அவர்களின் தூண்டுதலின் பேரிலும்தான் நடைபெற்றதாகக் கருதப்பட்டன.
ஆனால், தற்போது தமிழகத்தின் சராசரி படிப்பறிவு விகிதம் 80 சதவிகிதத்தை கடந்து, தொடர்ந்து உயர்ந்தும் வரும் காலகட்டத்தில், படித்த இளைஞர்களே நேரடியாக ஆணவக் கொலைகளில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
தென் மாவட்டங்களில் கிராமப்புறங்களிலும் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இடையேகூட சாதிய வேற்றுமை நிலவுவதும் ஆபத்தான அறிகுறிகள்.
இந்தப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சாதிய அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் கைகளில் ஸ்டிக்கர் ஒட்டுவது, பச்சை குத்துவது, கலர் பொட்டு, கயிறுகளுடன் காணப்படுவதும் மாணவிகளும் தங்கள் பங்கிற்கு கலர் கயிறு, கலர் ரிப்பன் கட்டுவதுமாக இருக்கின்றனர்.
நெல்லை நான்குநேரியில் சாதிப் பாகுபாடு காரணமாக சின்னதுரை என்ற பள்ளி மாணவனை சக மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் அனைவரும் அறிந்ததே.
அப்போது, பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடையே சாதி உணர்வுகளால் ஏற்படக் கூடிய வன்முறைகளை தவிர்ப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க நீதிபதி சந்துரு தலைமையில் தமிழக அரசு குழு அமைத்தது.
அதன்படி, “கல்வி நிறுவனங்களுக்கு சாதிப் பெயர் வைக்கக் கூடாது, மாணவர்கள் கைகளில் கலர் கயிறு கட்டக் கூடாது, சாதிய அடையாளத்தை குறிக்கும் வகையில் நெற்றியில் பொட்டு வைக்கக் கூடாது, குறிப்பிட்ட சாதியினர் அதிகளவில் வசிக்கும் பகுதி பள்ளிகளில் அதே சாதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் நியமிக்கக் கூடாது” எனப் பல பரிந்துரைகளை நீதிபதி சந்துரு வழங்கினார்.
இதையடுத்து, மாணவர்கள் கலர் பொட்டு, கயிறு, ரிப்பன் கட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், பள்ளிகளில் எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டதா என்பது கேள்விக்குறியே.
பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் மத்தியில் உருவாகும் அல்லது உருவாக்கி வளர்க்கப்படும் சாதியப் பாகுபாடு எண்ணங்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் அரசுக்கு மட்டுமல்ல, இந்த சமுதாயத்துக்கும் இருக்கிறது.
இனிமேலும் சுர்ஜித்கள் உருவாகாமல் இருக்கட்டும்!