கொள்முதல் நிலையங்களில் எடைக் குறைவுக்கு அபராதம் விதிப்பு: பணியாளா்கள் அதிருப்தி
கேரள பள்ளிகளில் கோடை விடுமுறைக்கு பதில் மழைக்கால விடுமுறை - புதிய விவாதம்; நீங்க என்ன நினைக்குறீங்க?
நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை ஏப்ரல், மே மாதங்களில் விடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதேசமயம் மழைக்காலங்களில் பலத்த மழை பெய்யும் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதும் வழக்கமாக உள்ளது. அதிகமாக மழை பெய்யும் கேரள மாநிலத்தில் மழை காலங்களில் நிலச்சரிவு, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு எற்படுவது என பல இடர்கள் ஏற்படுகின்றன.
இதை அடுத்து உள்ளூர் விடுமுறைகள் அதிகமாக விடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கோடைகாலத்திற்கு பதில் மழை காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடலாமா என கேரள பள்ளி கல்வித்துறை அமைச்சர் வி.சிவன் குட்டி சமூக வலைத்தளங்கள் மூலம் பொதுமக்களிடம் கருத்து கேட்டு உள்ளார். இது குறித்து அமைச்சர் சிவன் குட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
படிப்பு தடைபடுகிறது
``கேரள மாநிலத்தில் ஏப்ரல், மே மாதங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகிறது. இந்த மாதங்களில் மாநிலத்தில் வெப்பம் கடுமையாக இருக்கும் என்பதால் குழந்தைகளுக்கு சிரமம் ஏற்படும் என்பது உண்மைதான். அதேசமயம் மான்சூன் காலமான ஜூன், ஜூலை மாதங்களில் பலத்த மழை காரணமாக பல பெரும்பாலும் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டி நிலை ஏற்படுகிறது. அதனால் படிப்பு தடைபடுகிறது.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை காலம் ஏப்ரல், மே மாதங்களுக்கு பதிலாக மழைக்காலமான ஜூன், ஜூலை மாதங்களில் மாற்றி வைக்கலாமா என ஒரு பொது விவாதத்தை நான் தொடங்கிவைக்கிறேன். கோடை காலமும் மழைக்காலமும் சேர்த்து மே ஜூன் மாதங்களில் விடுமுறை விடலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது.
ஆதரவும் எதிர்ப்பும்
இந்த விஷயத்தில் உங்களின் மதிப்புமிக்க கருத்துகளையும், வழிகாட்டுதலையும் அறிய விரும்புகிறேன். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் என்னென்ன நன்மைகள் உள்ளன, என்னென்ன தீமைகள் உள்ளன. குழந்தைகளின் படிப்பையும் ஆரோக்கியத்தையும் இது பாதிக்குமா? ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் இது நடைமுறையில் சாத்தியப்படுமா. மற்ற மாநிலங்களிலும், பிற நாடுகளிலும் உள்ள விடுமுறை காலங்களிலிருந்து வித்தியாசமாக நாம் எப்படி முன்மாதிரியாக மாறலாம் என்பது போன்ற உங்கள் வழிகாட்டுதல்கள் மற்றும் கருத்துக்களை பதிவிடுங்கள். ஆக்கப்பூர்வமான விவாதத்துக்கு தொடக்கமிட இது உதவியாக இருக்கும் என நம்புகிறேன். உங்கள் பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.” என அவர் பதிவிட்டுள்ளார்.

மழைக்காலத்தில் விடுமுறை விடுவதற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் எழுந்துள்ளன. மழைக்காலத்தில் குழந்தைகள் வீட்டில் இருப்பது பாதுகாப்பனது எனவும். மழைக்காலங்களில்தான் தொற்றுநோய்கள் அதிகரிக்கும் எனவே அந்த சமயத்தில் விடுமுறை விடுவது நல்லதுதான் எனவும் ஆதரவான கருத்து எழுந்துள்ளன.
அதே சமயம், மழைக்காலத்தில் விடுமுறை விட்டால் குழந்தைகள் வெளியே விளையாட போகமுடியாத நிலை ஏற்படும். வீட்டுக்குள்ளேயே முடங்குவதால் மொபைல்போன் அதிகமாக பயன்படுத்தும் நிலை ஏற்படும் எனவும் கோடை காலத்தில் குழந்தைகள் வகுப்பறையில் அமருவதில் சிரமம் உள்ளதாகவும் எதிரான கருத்துக்களும் பதிவாகி உள்ளன.!
இது குறித்து உங்கள் கருத்துகளையும் கீழே பதிவிடுங்கள் மக்களே..!