சாதிவாரி கணக்கெடுப்பு: ``ராகுல் காந்திபோல ஸ்டாலின் தவறை உணர்வாரா?'' - அன்புமணி க...
தாவரங்கள் வலிக்கிறது என்று சொன்னால் பூச்சிகள் விலகிச் செல்லுமா? - ஆச்சர்ய தகவல்
தக்காளிச்செடி ஒன்று நீர்ச்சத்துக்குறைவு பிரச்னையில் இருக்கிறது. இது தெரியாமல், பெண் அந்துப்பூச்சி ஒன்று, அந்தத் தக்காளிச் செடியின் இலை ஒன்றில் தன் மூட்டைகளை இடும் எண்ணத்துடன் வருகிறது. அப்படி வருகையில், தக்காளிச்செடி 'நானே நீர்ச்சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்' என்று அந்த அந்துப்பூச்சியிடம் சொல்கிறது. அதைக் கேட்டதும் அந்த பெண் அந்துப்பூச்சி, நலமில்லாமல் இருக்கிற தக்காளிச்செடியின் இலைகளின் மீது முட்டையிடாமல் சென்று விடுகிறது.
என்ன... தக்காளிச்செடிகள் பேசுமா; அதை அந்துப்பூச்சிகள் கேட்குமா என்று ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால், அது உண்மை. சமீபத்திய ஆய்வு ஒன்று இதை உறுதிப்படுத்தி இருக்கிறது. அந்த ஆய்வுப்பற்றியும், தாவரங்கள் பூச்சிகளிடம் எப்படிப் பேசுகின்றன என்பதுப்பற்றியும் இயற்கை ஆய்வாளர், ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் கோவை சதாசிவம் விளக்கினார்.

''பூமியில் தாவரங்கள் பூக்கத் தொடங்கிய 350 மில்லியன் ஆண்டுகளாக, தாவரங்களும் பூச்சிகளும் தங்களுக்கு இடையே நுண்ணியத்தொடர்பை படிநிலை வளர்ச்சியில் பெற்றுள்ளன. ஒன்றின் உணர்வை இன்னொன்றால் புரிந்துகொள்ள முடிகிற அளவுக்கு தாவரங்கள் மற்றும் பூச்சிகளிடையே உறவு இருக்கிறது. மனிதர்களின் கண்களுக்குப் புலப்படாத இந்த சூழல் மண்டலம் தொடர்பாக பல ஆய்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. சில ஆய்வுகள், அத்தகைய சூழல் மண்டலம் இருப்பதை அவ்வப்போது நிரூபித்துக்கொண்டும் இருக்கின்றன.
இந்நிலையில்தான், தக்காளிச்செடியின் வலி உணர்வை அந்துப்பூச்சி புரிந்துகொண்ட ஆராய்ச்சி வெளியாகி மொத்த உலகத்தையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இஸ்ரேல் நாட்டில் இருக்கிற 'டெல் அவிவ் பல்கலைக்கழக'த்தின் தாவரவியல் பேராசிரியர் யோஸி யோவெல் தலைமையிலான குழு, தாவரங்களுக்கும் பூச்சிகளுக்குமிடையேயான இந்த நுட்பமான உறவை ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளது. செடிகள் ஆரோக்கியமற்ற நிலையில் இருந்தால் வலியுடன் முனங்கும் என்பதை இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலகுக்குச் சொன்னதும் இந்தக் குழுதான்'' என்ற கோவை சதாசிவம், தாவரங்களின் நுட்பமான உணர்வுகளை பகிர ஆரம்பித்தார்.

''தாவரங்கள் புலன் உணர்வு கொண்டவை அல்ல. என்றாலும், ஒளியின் திசையை அவற்றால் அறிந்துகொள்ள முடியும். உதாரணத்துக்கு, வீட்டுக்குள் நாம் வளர்க்கிற சில செடிகள், ஒளி வருகிற திசையை நோக்கி வளர்வதை பார்த்திருப்போம். இதைத்தான் 'தாவரங்களின் உள்ளுணர்வால் விளைகிற செயல்பாடு' என பேராசிரியர் யோஸி யோவெல் சொல்கிறார்.
வறட்சியானக் காலங்களில் பூமிக்கடியில் இருக்கிற நீர் இருப்புப்பற்றிய தகவல்களை, தாவரங்கள் ஒன்றுக்கொன்று பரிமாறிக்கொள்கின்றன. தன்னுடைய இலைகளை சேதப்படுத்துகிற கம்பளிப்பூச்சிகளையும், நத்தைகளையும் தவிர்க்க, அவற்றுக்கு எதிரான வேதிப்பொருள்களை இடைவிடாது உற்பத்தி செய்து இலைகளின் வழியே வெளியிடுவதோடு, தன்னருகே இருக்கிற மற்ற தாவரங்களையும் எச்சரிக்கை செய்கின்றன. தாவரங்களும் கூட்டாக சிந்திக்கின்றன; தன்னைத்தானே தற்காத்துக்கொள்ள தாவரங்களுக்கும் தெரியும் என்பதுதானே இதற்கு அர்த்தம்.

தாவரங்களால் விலங்குகளைப்போல நடக்க முடியாது; பறவைகளைப்போல பறக்க முடியாது. என்றாலும், நின்ற இடத்தில் இருந்தே புறச்சூழலை அறிய முடியும். இது எப்படி நிகழும் என்கிறீர்களா..? குளிர்காலத்தில் செயலற்று ஓய்வில் இருப்பது; இலையுதிர் காலத்தில் இலைகளை உதிர்ப்பது; இளவேனில் காலத்தில் பூத்து, காய்த்து, கனிவது; முதுவேனில் பருவத்தில் விதைகளைப் பரப்புவது என, மாறும் பருவங்களை புறச்சூழலின் வெப்பநிலை மூலம் தாவரங்கள் அறிந்து செயல்படுகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
சரி, தாவரங்கள் எழுப்புகின்ற ஒலிகளை மனிதன் கேட்க முடியுமா என்றால், அது முடியாது. அந்த ஒலிகள் நாம் கேட்கும் வரம்புக்கு அப்பால் இருக்கின்றன. ஆனால், இந்த ஒலியை பலவகை பூச்சிககளால் உணரமுடியும். தாவரங்களின் ஒலியை உணர்ந்த பூச்சிகள் ஒன்று நெருங்கி வருகின்றன அல்லது விலகிப்போகின்றன. பூச்சிகளை அழைப்பதற்கும், அவற்றை தவிர்ப்பதற்கும் தாவரங்கள் வெவ்வேறு வேதிப்பொருளை வெளியிடுகின்றன. இதனை உணர்ந்தே தாவரங்களை அணுகுகின்றன பூச்சிகள். அதாவது, தாவரங்களின் சம்மதமில்லாமல் பூச்சிகளால் மகரந்த சேர்க்கை செய்ய முடியாதோ என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.

தக்காளிச்செடியின் வேதனை ஒலிக்கு, அந்துப்பூச்சி எதிர்வினையாற்றியதுபோல, எல்லா தாவரங்களின் ஒலிகளுக்கும் எல்லா பூச்சிகளும் எதிர்வினையாற்றுமா... இந்தப் புரிந்துணர்வின் அடிப்படையில்தான் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறதா... செடிகளில் ஒளிந்துகொள்ளவும், அதை முழுமையாக உண்ணவும், செடிகளில் ஒலிகளின் அடிப்படையில்தான் பூச்சிகள் எதிர்வினையாற்றுகின்றனவா... தாவரங்கள் - பூச்சிகளின் இடையேயான உறவின் மூலம் பூச்சிக்கொல்லி இல்லாமலே உலக அளவில் உணவு பாதுகாப்பை மேம்படுத்த முடியுமா என்பனவற்றை இனிதான் ஆய்வுகள் வழியே நாம் தெரிந்தகொள்ளவிருக்கிறோம்.
இப்போதை தாவரங்களுக்கும் மொழி இருக்கின்றன; அந்த மொழிக்கு பூச்சிகள் எதிர்வினையாற்றுகின்றன என்பது மட்டும் உறுதியாகிவிட்டது'' என்கிறார் கோவை சதாசிவம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR