ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை
கோவை: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணையின் பாதுகாப்பு கருதி 11 மதகுகள் வழியாக 2,400 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளதை அடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. ஆழியார் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மக்கள், அணை பகுதியை ஒட்டி ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் எனவும், துணி துவைக்கவோ, குளிக்கவோ அல்லது மற்ற பிற தேவைகளுக்காக ஆற்றப்படுகைக்கு செல்ல வேண்டாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஆழியாறு நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள ஆழியாறு அணை நிரம்பும் நிலையை எட்டியுள்ளது.
120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி 119.00 அடியை எட்டியது. பொள்ளாச்சி பகுதியில் 9.4 மி.மீ., மழை அளவு பதிவாகி உள்ள நிலையில் அணையிலிருந்து சனிக்கிழமை 11 மதகுகள் திறக்கப்பட்டு மதகுகள் வழியாக சுமார் வினாடிக்கு 2,400 கனஅடி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது.
அணைக்கு நீர்வரத்தைப் பொறுத்து மேலும் நீர் வெளியேற்றம் அதிகரிக்கவோ குறைக்கவோ நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள் தெரிவித்தனர்.