கொள்முதல் நிலையங்களில் எடைக் குறைவுக்கு அபராதம் விதிப்பு: பணியாளா்கள் அதிருப்தி
இந்தியா உள்பட 69 நாடுகளுக்கு புதிய வரி: டிரம்ப் கையெழுத்து! யாருக்கு அதிகம்? குறைவு?
அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை கையெழுத்திட்டார்.
இந்த உத்தரவு ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டைப் பொறுத்து குறைந்தபட்சம் 10 சதவிகிதமும் அதிகபட்சம் 41 சதவிகிதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 69 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் பிரதேசம் புதிய வரி விதிப்பு பட்டியலில் இருக்கும் நிலையில், பிற நாடுகள் அனைத்துக்கும் 10 சதவிகிதம் வரி விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கையெழுத்திட்டார் டிரம்ப்
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பரஸ்பர வரி குறித்த அறிவிப்பு உலகளவில் பேசுபொருளாகியுள்ளது. அதாவது, அமெரிக்க பொருள்களுக்கு பிற நாடுகள் எவ்வளவு வரி விதிக்கிறதோ, அதே அளவுக்கு வரி அந்நாட்டின் பொருள்களுக்கு அமெரிக்காவில் விதிக்கப்படும் என்பதுதான்.
இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்ட வந்த நிலையில், பரஸ்பர வரி விதிப்பு நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பேச்சுவார்த்தையில் இதுவரை உடன்பாடு எட்டப்படாததால், இந்தியாவுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்திருந்தார்.
தற்போது இந்தியா உள்பட 69 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் பிரதேசத்துக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய வரி விதிப்பு உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
யாருக்கு அதிக வரி?
அதிகபட்சமாக சிரியாவுக்கு 41% வரி விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, லாவோஸ் மற்றும் மியான்மர் நாடுகளுக்கு 40% இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்துக்கு 39%, ஈராக் மற்றும் செர்பியாவுக்கு 35%, லிபியா, அல்ஜீரியாவுக்கு 30% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை போன்று வியாட்நாம் மற்றும் தைவான் நாடுகளுக்கு 20 முதல் 25 சதவிகிதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பாகிஸ்தானுக்கு 19%, இஸ்ரேல், ஐஸ்லாந்து, நார்வே, பிஜி, கானா, கயானா மற்றும் ஈக்வடார் நாடுகளுக்கு 15% விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.