நட்சத்திர பலன்கள்: ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 7 வரை #VikatanPhotoCards
’2 பேருமே தத்தெடுக்கப்பட்டவர்கள் தான்’ - தந்தை சொத்தில் பங்கு கேட்ட பிள்ளைகள் ஷாக்!
சீனாவின் தியான்ஜின் நகரில் ஒரு வினோதமான சம்பவம் நடந்துள்ளது. இறந்த தந்தையின் ரூ.3.6 கோடி (மூன்று மில்லியன் யுவான்) சொத்துக்காக அண்ணன், தங்கை இருவருமே சண்டையிட்டுக் கொண்ட நிலையில் இவர்கள் இருவரும் அவரது உண்மையான பிள்ளைகள் இல்லை என்பது நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியின்படி, குடும்ப தலைவரான சன், மார்ச் 2025-ல் காலமானார்.
அவர் இறப்பதற்கு முன்பாக, தனது ரூ.3.6 கோடி மதிப்புள்ள சொத்தின் உரிமையை முழுவதுமாக தன் மகனுக்கு மாற்றி எழுதியுள்ளார். மேலும் 1966-ல் தானும் தனது மனைவியும் தத்தெடுத்த தனது மகளுக்கு, மகன் "இழப்பீடு" வழங்க வேண்டும் என்றும் சன் அறிவுறுத்தியிருந்தார்.

அவரது உயிலில், "எங்கள் மகள் தத்தெடுக்கப்பட்டவள் என்றாலும், நாங்கள் அவளை எங்கள் சொந்த மகளாகவே நடத்தினோம். எங்கள் முதுமைக் காலத்தில், எங்கள் மகன்தான் எங்களைக் கவனித்துக் கொண்டான்.
நாங்கள் வீட்டை அவனுக்குக் கொடுத்தோம். மகன் சகோதரிக்கு இழப்பீடு வழங்க சம்மதித்துள்ளான். நீங்கள் இருவரும் உண்மையான உடன்பிறப்புகளாகப் பழக வேண்டும் என நம்புகிறோம்," என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த முடிவை எதிர்த்த தத்தெடுக்கப்பட்ட மகள், சொத்து மாற்று ஒப்பந்தத்தில் தந்தையின் கையெழுத்து மட்டுமே இருந்ததாகவும், தனது தாயின் பங்கும் சொத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டார். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் ஒரு வழக்காக வந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது, சகோதரி ஒரு புதிய ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார். அதில் தனது சகோதரரின் வீட்டு பதிவு ஆவணங்களில் "தத்தெடுக்கப்பட்டவர்" என்று குறிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, அவரும் ஒரு உயிரியல் குழந்தை அல்ல என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த சொத்து 2007-ஆம் ஆண்டிலேயே சட்டப்பூர்வமாக மகனின் பெயருக்கு மாற்றப்பட்டுவிட்டதால், அது இனி பரம்பரை சொத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படாது என்று குறிப்பிட்டார். இரு உடன்பிறப்புகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒரு தீர்வு கிடைத்திருக்கிறது.
அதன்படி, சொத்து சகோதரரிடமே இருக்கும் என்றும், அவர் தனது சகோதரிக்கு இழப்பீடாக ரூ.66 லட்சம் (5,50,000 யுவான்) வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.