கேளிக்கை பூங்காவில் சவாரியின் போது இரண்டாக உடைந்து விழுந்த ராட்டினம்: 23 பேர் கா...
மாலேகாவ் குண்டுவெடிப்பு: "நான் சன்னியாசியாக இருப்பதால்தான்" - விடுதலையான பிரக்யா சிங் பேச்சு
மகாராஷ்டிரா மாநிலம் மாலேகாவில் 2008ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்து 6 பேர் உயிரிழந்தனர். மசூதி அருகில் நடந்த இக்குண்டு வெடிப்பில் 100 பேர் காயம் அடைந்தனர்.
முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மாலேகாவில் காவித் தீவிரவாதம் தலைதூக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இக்குண்டு வெடிப்பு தொடர்பாக முன்னாள் பா.ஜ.க எம்.பி.யும் பெண் சாமியாருமான பிரக்யா சிங் தாக்குர், ராணுவ லெப்டினண்ட் கர்னல் பிரசாத் புரோஹித், மேஜர் ரமேஷ் உபாதியா, அஜய், சுதாகர், சுதாகர் சதுர்வேதி, சமீர் குல்கர்னி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் பிரக்யா சிங் மருத்துவக் காரணங்களைக் காட்டி இவ்வழக்கில் ஜாமீன் பெற்றார்.

UAPA
இவ்வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சி தனது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரித்து வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தீவிரவாத தடுப்புச் சட்டமான UAPAயின் சட்டப்பிரிவு 16 (பயங்கரவாதச் செயலைச் செய்தல்), 18 (பயங்கரவாதச் செயலைச் செய்யச் சதி செய்தல்), 120 (b) (குற்றச் சதி), 302 (கொலை), 307 (கொலை முயற்சி), 324 (தானாக முன்வந்து காயப்படுத்துதல்) மற்றும் பிரிவு 153 (அ) (இரண்டு மதக் குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மும்பை சிறப்பு நீதிமன்றம்
குண்டு வெடிப்பு நடந்து 10 ஆண்டுகள் கழித்த நிலையில் 2018ம் ஆண்டு இவ்வழக்கு விசாரணை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்கியது. இதில் 223 பேர் சாட்சியம் அளித்தனர். இவ்வழக்கு விசாரணை நடந்த ஏப்ரல் 19ம் தேதி முடிவுக்கு வந்தது.
இவ்வழக்கில் இன்று (ஜூலை 31) தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஏ.கே.லஹோதி, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டார். அரசுத் தரப்பு இவ்வழக்கில் குற்றத்தை நிரூபிக்கத் தவறிவிட்டதாகவும், வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்றும், சந்தேகத்திற்கு அப்பால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஆதாரம் இல்லை
குண்டு வெடிப்புக்கு ஆர்.டி.எஸ் வெடி மருந்து பயன்படுத்தப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டாலும் அதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும், அவை புரோஹித் வீட்டில் தயாரிக்கப்பட்டது என்பதற்கு ஆதாரம் இல்லை என்றும், குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனம் பிரக்யா சிங்கிற்குச் சொந்தமானது என்பதை நிரூபிக்கவும் ஆதாரம் இல்லை என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். தீர்ப்பு வழங்கப்பட்டதால் இன்று அனைவரும் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்.
நான் சன்னியாசியாக இருப்பதால்தான்...
தீர்ப்பைக் கேட்ட பிரக்யா சிங், ''இந்த வழக்கு எனது வாழ்க்கையை அழித்து விட்டது. குற்றவாளிகளை கடவுள் தண்டிப்பார். எங்களை விசாரணைக்கு அழைப்பதாக இருந்தால் அதற்கு அடிப்படை காரணம் இருக்க வேண்டும். என்னை விசாரணைக்கு அழைத்து கைது செய்து சித்ரவதை செய்தார்கள். யாரும் எங்களுக்கு ஆதரவாக இல்லை. நான் சன்னியாசியாக இருப்பதால்தான் இப்போது உயிரோடு இருக்கிறேன்'' என்றார்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஏற்கனவே ஜாமீனில் இருக்கின்றனர். இவ்வழக்கை ஆரம்பத்தில் மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படை விசாரித்தது. அதன் பிறகுதான் தேசிய புலனாய்வு ஏஜென்சி நடத்தியது.
இக்குண்டு வெடிப்புக்கு பிரக்யா சிங்கின் இரு சக்கர வாகனம் பயன்படுத்தப்பட்டதாகவும், லெப்டினண்ட் பிரசாத் புரோஹித் தேவையான வெடிகுண்டுகளைத் தயாரித்ததாகவும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
சமீபத்தில் மும்பையில் நடந்த தொடர் ரயில் குண்டு வெடிப்பு வழக்கிலிருந்தும் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.