OPS: "பாஜகவுடன் உறவை முறிக்கிறோம்!" - ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு; அடுத்த நகர்வு என்...
சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை ரத்தாகுமா? மான் வேட்டை வழக்கு மீண்டும் விசாரணை!
சல்மான் கான் மீதான மான் வேட்டை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
கடந்த 1998-ஆம் ஆண்டு சட்டவிரோதமாக மான்களை வேட்டையாடியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கானை குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து, அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜோத்பூர் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்ப்பட்டது. ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் சல்மான் கான் தரப்பிலிருந்தும் ராஜஸ்தான் அரசு தரப்பிலிருந்தும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இத்தனை ஆண்டுகளுக்கு பின் இந்த மனுக்கள் மீதான விசாரணை வரும் செப்டம்பரில் நடத்தப்படுகிறது. செப்டம்பர் 22-ஆம் தேதி இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
மான் வேட்டை வழக்கில் இதுவரை...
கடந்த 1998-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி ராஜஸ்தானின் ஜோத்பூர் பகுதியில் 'ஹம் சாத் சாத் ஹைன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அதில் சல்மான், தபு, நீலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் பல்வேறு காட்சிகள் படமாக்கப்பட்டன.
அன்றைய நாள் இரவில், வனப்பகுதிக்கு அருகே ஜிப்சி வாகனத்தில் சல்மான் உள்ளிட்டோர் சென்றனர். அப்போது அரிய வகை மான்கள் அங்கு உலவிக் கொண்டிருந்தன. அவற்றில் இரண்டு மான்களை சல்மான் கான் வேட்டையாடினார். உடன் சென்ற நட்சத்திரங்களும் அதற்கு உதவியதாகத் தெரிகிறது.
இந்நிலையில், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வனஉயிரினப் பாதுகாப்புச் சட்டம், பிரிவு 9/61-இன் கீழ் சல்மான், சையஃப் அலி கான், தபு, நீலம், சோனாலி, துஷ்யந்த் சிங் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன. அந்த சட்டப் பிரிவின்படி குற்றம் நிரூபணமானால் அதிகபட்சமாக 6 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும்.
ஜோத்பூர் கீழமை நீதிமன்றத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகாலம் இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. 2018 ஏப்ரல் 5-ம் ஆம் தேதி சல்மான் கானை குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து, அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு வருகிறது.