ஆா்.கே. நகா், அம்பத்தூா் பேருந்து நிலையங்கள் 2 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் அ...
ம.பி.யில் 23,000 பெண்கள், சிறுமிகளைக் காணவில்லை!
மத்தியப் பிரதேசத்தில் குறைந்தது ஒரு மாதம் முதல் ஒன்றரை ஆண்டுகளாக சுமார் 23,000 சிறுமிகள் மற்றும் பெண்களைக் காணவில்லை என மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் உள்துறை அமைச்சரும் மூத்த காங்கிரஸ் எம்எல்ஏவுமான பாலா பச்சன், மாநிலத்தில் காணாமல் போன சிறுமிகள், பெண்கள் பற்றி கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மாநில அரசு எழுத்துப்பூர்வமாக பதிலில் பல தகவல்கள் தெரிய வந்துள்ளது.
கடந்த ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி, மாநிலத்தில் 21,000-க்கும் மேற்பட்ட பெண்களும் 1,900-க்கும் மேற்பட்ட சிறுமிகளும் ஒரு மாதத்திற்கும் மேலாகக் காணாமல் போயுள்ளனர். 2024 ஆம் ஆண்டு காணாமல் போன பெண்கள், சிறுமிகளும் இதில் அடங்குவர். 30 மாவட்டங்களில் தலா 500க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயுள்ளனர். போபால், இந்தூர், ஜபல்பூர், சாகர், குவாலியர், சத்தார்பூர், தார் மற்றும் ரேவா மாவட்டங்கள் இதில் அடங்கும்.
தற்போதைய முதல்வர் மோகன் யாதவின் சொந்த மாவட்டமான உஜ்ஜைனியிலும் 500க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். பழங்குடியினர் அதிகமுள்ள பகுதிகளிலும் சிறுமிகள், பெண்கள் காணாமல் போனது தெரியவந்துள்ளது.
மேலும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக குற்றச் செயல்களில் ஈடுபட்ட 1,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 575 பாலியல் வன்கொடுமை வழக்குகள், 600 பாலியல் தொல்லை வழக்குகள்.
காணாமல் போன பெண்கள் தொடர்பான வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட 76 பேரும் அதேபோல சிறுமிகள் காணாமல்போன வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட 254 பேரும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.