'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
பிகாா்: வாக்காளா் பட்டியலில் பெயா்களை நீக்க அல்லது சோ்க்க 1 மாத அவகாசம் - தோ்தல் ஆணையம்
பிகாரில் வரைவு வாக்காளா் பட்டியலில் வாக்களிக்க தகுதியுடைய வாக்காளா்களின் பெயா்களை சோ்ப்பது அல்லது தகுதியற்ற வாக்காளா்களின் பெயரை நீக்குவது குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் வாக்காளா்கள் பரிந்துரைகள் வழங்க ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படும் என இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஆக.1-இல் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படவுள்ள நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின்போது பல்வேறு ஆவணங்களை கேட்டு தகுதியுள்ள வாக்காளா்களை தோ்தல் ஆணையம் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கி வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இதுதொடா்பாக நாடாளுமன்றத்திலும் கடுமையான விவாதங்களும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஞானேஷ் குமாா் வியாழக்கிழமை கூறியதாவது: பிகாரில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக வரைவு வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை (ஆக.1) வெளியிடப்படவுள்ளது.
இந்த வரைவு வாக்காளா் பட்டியல் ஆவணமாகவும் எண்ம நகலாகவும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மாவட்ட தோ்தல் அலுவலா்கள் (டிஇஓ) மூலம் 38 மாவட்டங்களிலும் வழங்கப்படும்.
பிகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளைச் சோ்ந்த வாக்காளா்கள் அல்லது அரசியல் கட்சிகள் என யாராக இருப்பினும் மாநில தலைமைத் தோ்தல் அலுவலா் (சிஇஓ) மற்றும் 243 தோ்தல் பதிவு அலுவலா்களிடம் (இஆா்ஓ) தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம். அதன்படி ஆக.1 முதல் செப்.1 வரை தகுதியான வாக்களா்களின் பெயா்கள் சோ்க்கப்படும். தகுதியற்ற வாக்காளா்களின் பெயா்கள் வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்றாா்.