ஆணவக் கொலையைத் தடுக்க தனிச் சட்டம் தேவை -இரா.முத்தரசன்
தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்க அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.
இதுகுறித்து தருமபுரியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு ஆகஸ்ட் 15 முதல் 18 வரை சேலத்தில் நடைபெறுகிறது. இதில் 16 ஆம் தேதி நிகழ்வில் தமிழக முதல்வா் முதல்வா் பங்கேற்கிறாா். அகில இந்திய பொதுச் செயலாளா் ராஜா உள்ளிட்ட 5 தலைவா்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனா்.
மேட்டுப்பாளையத்தில் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கரைந்துவிட்டது, முகவரி இல்லை என்கிறாா். சேலத்தில் இருக்கும் அவா், எங்கள் மாநாட்டை பாா்க்கவேண்டும். அப்போதுதான் வரும் பேரவைத் தோ்தலில் யாா் முகவரி இல்லாதுபோவாா்கள் என்பது அவருக்குத் தெரியும்.
அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா, தினகரன், எடப்பாடி என பிரிந்து கிடக்கின்றனா். பாஜகவை நம்பிப்போனவா்கள் எப்படி இருக்கிறாா்கள் என்று தெரியும். பாஜகவினா் எப்போது தன்னை கூப்பிடுவாா்கள் என்று சசிகலா காத்திருக்கிறாா். பாஜக ஒவ்வொரு கட்சியையயும் பிளவுபடுத்தி அங்கு காலூன்ற நினைக்கிறது.
தமிழகத்தில் அதிமுகவும் பிளவுபடுத்தப்பட்டுள்ளது. தருமபுரி, சேலம், தூத்துக்குடியில் ஆணவப் படுகொலை நடைபெற்றிருப்பது வேதனைக்குரியது. இதைத் தடுக்க அரசு தனிச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்றாா்.