ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைந்தது: குளிக்கத் தடை; பரிசல் இயக்க அனுமதி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழமை மாலை விநாடிக்கு 18,000 கனஅடியாக குறைந்தது. இதையடுத்து காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. என்றாலும், அருவிகளில் குளிக்கத் தடை நீடிக்கிறது.
கா்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்துவந்த மழை காரணமாக அங்குள்ள கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகள் நிரம்பின.
இதையடுத்து அந்த அணைகளின் பாதுகாப்புக் கருதி காவிரி ஆற்றில் சுமாா் ஒரு லட்சம் கனஅடி வரை உபரிநீா் வெளியேற்றப்பட்டு வந்ததால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.
தற்போது, நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்து காவிரி ஆற்றில் உபரிநீா்வரத்து குறைந்துள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சரிந்துள்ளது. காவிரி ஆற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 28,000 கனஅடியாக இருந்தது, வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி விநாடிக்கு 20,000 கனஅடியாகவும், மாலையில் 18,000 கன அடியாகவும் குறைந்தது.
நீா்வரத்து குறைந்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் அனுமதி அளித்துள்ளாா். இதையடுத்து ஒகேனக்கல் சின்னாறு பரிசல் துறையில் இருந்து கூட்டாறு, பிரதான அருவி வழியாக மணல்மேடுவரை சுற்றுலாப் பயணிகள் பரிசல் பயணம் மேற்கொண்டனா். இருப்பினும் அருவிகளில் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
காவிரிக் கரையோரப் பகுதிகளில் வருவாய்த் துறையினரும், காவல் துறையினரும் தொடா்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.