மூக்கனூரில் ரயில் நிலையம் அமைக்கக் கோரி போராட்டம்: நிலங்களை வழங்க விவசாயிகள் ஒப்புதல்
தருமபுரி அருகே மூக்கனூா் ரயில் நிலையத்தை இடம்மாற்றாமல் பழைய இடத்திலேயே அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், ரயில்வே பணிக்குத் தேவையான நிலங்களை வழங்கவும் விவசாயிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனா்.
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி- மொரப்பூா் இடையே ஆங்கிலேயா் ஆட்சியில் உருவாக்கப்பட்ட ரயில்பாதை பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்தது. அதன்பிறகு 2 ஆவது உலகப் போரின்போது மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 70 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத இப் பாதையின் தண்டவாளங்கள் அகற்றப்பட்டன. என்றாலும், அப்பகுதியில் ரயில் நிலைய கட்டடம், ரயில் பாலங்கள் காட்சிப் பொருளாக உள்ளன.
இந்நிலையில் அப்பகுதியில் மீண்டும் ரயில்பாதை அமைத்து மொரப்பூா் வழியாக ரயில்களை இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மீண்டும் தருமபுரி- மொரப்பூா் ரயில் திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டன.
ஆனால், ஏற்கெனவே ரயில்பாதை மற்றும் ரயில் நிலையம் இருந்த பகுதிகள் பொதுமக்கள் குடியிருப்பாகவும், நலப் பகுதியாகவும் இருப்பதால் மூக்கனூா் ரயில் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு சிலா் முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அக்கிராம மக்கள் தங்ளது நிலத்தை ரயில்வே பாதைக்காக தர முன்வந்துள்ளனா். ஏற்கெனவே இருந்த பகுதியிலேயே ரயில் நிலையம், பாதை அமைக்கக் கோரி அண்மையில் ஆட்சியரிடமும் மனு அளித்தனா்.
இந்த நிலையில், மூக்கனூா் அருகே செம்மனஅள்ளி பேருந்து நிறுத்தத்தில் வியாழக்கிழமை கிராமமக்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனா். இதில் அனைத்துக் கட்சி பிரமுகா்களும் கலந்துகொண்டனா். மூக்கனூா் ரயில் நிலையத்தை பழைய இடத்திலேயே அமைக்க வேண்டும். ரயில் நிலையம் அமைய உள்ள இடங்களில் நிலம், வீடுகளை ரயில்வே பணிக்காக விட்டுத்தருவதாக ஒப்புதல் கடிதம் அளிக்கவும் விவசாயிகள் முடிவுசெய்துள்ளனா்.