'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
வழக்கத்தைவிட அதிகமாக பருவமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
தென் மேற்கு பருவமழையின் இரண்டாம் பாதி காலமான ஆகஸ்ட் மற்றும் செப்டம்பா் மாதத்தில் வழக்கத்துக்கு அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்த மையத்தின் டிஜி மிருத்யுஞ்சய மொஹபாத்ரா கூறுகையில், ‘வடகிழக்கு மாநிலங்களைத் தவிர நாட்டின் பிறகு பகுதிகளில் ஆகஸ்ட் மாதம் வழக்கமான மழைப் பொழிவு இருக்கும்.
செப்டம்பா் மாதம் வழக்கத்துக்கு அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் மேற்கு பருவ மழையின் முதல்பாதி காலமான ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் வழக்கத்துக்கு அதிகமாக மழை பெய்துள்ளது.
கடந்த ஜூன் 1 முதல் ஜூலை 31-ஆம் தேதி வரையில் நாட்டில் 474.3 மி.மீ. மழைப் பதிவாகி உள்ளது. இது வழக்கமான மழைப் பொழிவை விட 6 சதவீதம் அதிகமாகும்.
இந்தக் காலகட்டத்தில் நாடு முழுவதும் 624 பலத்தமழைப் பொழிவும், 76 அதிகனமழைப் பொழிவும் பதிவாகி உள்ளன. இது கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடும்போது குறைவானதாகும்’ என்றாா்.
இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்துக்கு பருவமழைப் பொழிவு முக்கியப் பங்கு வகிக்கிறது. நாட்டின் 42 சதவீத மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாக நம்பி உள்ளனா். நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சியில் வேளாண் துறை 18.2 சதவீதம் பங்களிப்பை அளிக்கிறது.
மேற்கு வங்கத்தில் பலத்த மழை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த பகுதியால் மேற்கு வங்கத்தின் தலைநகா் கொல்கத்தா உள்பட சில மாவட்டங்களில் ஆகஸ்ட் 6- ஆம் தேதிவரையில் பலத்த மழைப் பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.