நீட் தேர்வில் ஒரே குடும்பத்தில் தாயும் மகளும் தேர்ச்சி! இருவருக்கும் எம்பிபிஎஸ் ...
"ஆபரேஷன் சிந்தூர்': இரு அவைகளிலும் தமிழக எம்.பி.க்கள் அதிருப்தி
நமது சிறப்பு நிருபர்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை விவகாரத்தில் மத்திய அரசு நடந்து கொள்ளும் விதத்துக்கு தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அதிருப்தி தெரிவித்தனர்.
இது தொடர்பாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு விவாதத்தின் இரண்டாம் நாள் அலுவலில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி பேசியதாவது: இந்தியாவுக்கு அச்சுறுத்தல் வந்தபோது, அரசுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி ஆதரவைத் தெரிவித்தன. ஆனால், மத்திய அமைச்சர்கள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகப் பேசி வரலாற்றைத் திரிக்கின்றனர்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளிநாடுகளுக்கு விளக்கிய குழுவில் எதிர்க்கட்சிகள் இருந்ததற்காக நாங்கள் பெருமையடையவில்லை. இதற்குக் காரணம், இந்திய மக்களை காப்பாற்றும் நடவடிக்கையில் அவர்களை மத்திய அரசு கைவிட்டுவிட்டதுதான்.
தேர்தல் வரும்போதெல்லாம் மத்திய அரசுக்கும் பிரதமருக்கும் தமிழக கலாசாரம் மீது திடீர் பாசமும் பெருமிதமும் ஏற்படும். ஆனால், கீழடி அகழாய்வு கண்டுபிடிப்புகளின் மகத்துவத்தை ஏற்க அரசு மறுக்கும். இந்தியாவின் வரலாறு தமிழகத்தில் இருந்துதான் எழுதப்பட வேண்டும் என தமிழக முதல்வர் வலியுறுத்தினார். பிரதமர்கூட கங்கைகொண்டசோழபுரத்துக்கு வந்துதான் பாரத பாரம்பரியத்தை விளக்கினார். அந்தப் பெயரே பறைசாற்றும் - "கங்கையைக் கொண்டவன் தமிழன், தமிழன் கங்கையை வெல்வான்'. இதை நினைவில் கொள்ளுங்கள் என்றார் கனிமொழி.
முழுமை பெறாத நடவடிக்கை: ஆ. ராசா பேசியதாவது: உளவுத் துறை மற்றும் ரா உளவுப் பிரிவின் ரகசிய அறிக்கைகளில் பஹல்காம் பகுதியை செயற்கைக்கோள் கண்காணிப்பு வளையத்துக்குள் வைத்திருக்க வேண்டும் என உள்ளது. அதன் பிறகும் அங்கு போதிய காவல் துறையினரோ, பாதுகாப்புப் படையினரோ இல்லாதது ஏன்? உங்களுடைய தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது நேரு, இந்திரா, காங்கிரஸ் வரலாறு என்று பழைய முன்னுதாரணங்களை மேற்கோள்காட்டி விமர்சிக்கிறீர்கள்.
நிர்வாகத் தகுதியின்மைக்கு மிகச்சிறந்த உதாரணம்தான் பஹல்காம் தாக்குதல். எங்கள் பார்வையில் ஆபரேஷன் சிந்தூர் என்பது டிரம்ப்பின் சண்டை நிறுத்த அறிவிப்புடன் முழுமை பெறாத நடவடிக்கையாகும் என்றார்.
மீண்டும் சிறப்பு அந்தஸ்து: தொல். திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்) பேசியதாவது: அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்கினால் காஷ்மீரில் அமைதி நிலவும், பொருளாதாரம் தழைக்கும் என மத்திய அரசு உறுதியளித்தது. அதற்கு மாறாக அங்கு எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஊடுருவியது பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்புகிறது. ஜம்மு- காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை வழங்கி, அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.
யார் பொறுப்பேற்பது? துரை. வைகோ (மதிமுக) பேசியதாவது: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தி, பயங்கரவாதிகளையும், அவர்களின் முகாம்களையும் அழித்தொழித்த நமது ராணுவத்தினருக்கும், இந்திய விமானப் படையினருக்கும் வணக்கத்தை சமர்ப்பிக்கிறேன்.
அதே நேரத்தில் பலத்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட காஷ்மீரில் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட இத்தகைய தாக்குதல் எப்படிக் கண்டறியாமல் விடப்பட்டது?. அதற்கு யார் பொறுப்பேற்பது என்றார் அவர்.
பாதுகாப்புத் தோல்வி: சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட்) பேசியதாவது: பஹல்காம் தாக்குதல் மூன்றடுக்கு பாதுகாப்பின் தோல்வியாகும். இதற்கு யார் பொறுப்பேற்க போவது? பிரதமர் பொறுப்பேற்கப் போகிறாரா? நீங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை எல்லா நிகழ்வுகளுக்கும் நேருவிலிருந்து, மன்மோகன் சிங் வரை பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்வீர்களே, இப்போது நீங்கள் யாரை கைகாட்டுவீர்கள் என்றார் அவர்.
மாநிலங்களவையில்...: திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா பேசியதாவது: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்ட எதிர்க்கட்சிகள் கோரின. ஆனால், மத்திய அரசு அதை ஏற்கவில்லை என்றார்.
சலசலப்பு: அதிமுக உறுப்பினர் தம்பிதுரை பேசும்போது, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் நடந்தவை என்ன, அது எந்தளவுக்கு இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது என்பதை மத்திய அரசு தெளிவாக விளக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
திருச்சி சிவா பேசும்போது முந்தைய அதிமுக ஆட்சியில் நடந்ததாக அவர் குறிப்பிட்ட சில நிகழ்வுகளையும், காங்கிரஸ் உறுப்பினர் ப.சிதம்பரம் பயங்கரவாதம் தோன்றியது தொடர்பாக தெரிவித்த சில கருத்துகளுக்கும் தம்பிதுரை ஆட்சேபம் தெரிவித்தார். அவருக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் சில நிமிஷங்களுக்கு சலசலப்பு நிலவியது.