நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள பதில் வருமாறு:
சொந்த வருவாய்க்காக கிராம பஞ்சாயத்துகளுக்கு உதவும் மத்திய திட்டங்கள் எவை?
கனிமொழிக்கு (தூத்துக்குடி) மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் பதில்: நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய பஞ்சாயத்து அமைப்புகளின் நிர்வாகத் திறன்களை மேம்படுத்த மத்திய நிதியுதவியுடன் புதுப்பிக்கப்பட்ட ராஷ்ட்ரிய கிராம ஸ்வராஜ் அபியான் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக "சமர்த் பஞ்சாயத்து' இணையதளம் மூலம் பஞ்சாயத்துகளின் சொந்த வருவாய் ஈட்டல் (ஓஎஸ்ஆர்) தரவுகள் சேகரிக்கப்படுகிறது. இதன் மூலம் வரி மற்றும் வரி அல்லாத வருவாயை ஆன்லைனில் கண்காணித்தல் எளிதாகிறது. தமிழகத்தில் 2017-2022 வரை சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி ஓஎஸ்ஆர் மூலம் சராசரியாக ரூ. 516.3 கோடி ஈட்டப்பட்டுள்ளது.
வேளாண் பொருள்கள் ஏற்றுமதியை இரட்டிப்பாக்க சிறப்பு திட்டம் உள்ளதா?
டி.ஆர். பாலுவுக்கு மத்திய விவசாயத்துறை இணை அமைச்சர் ராம்நாத் தாக்குர் பதில்: வணிகத் துறையின் கீழ் செயல்படும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருள்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் உரிய ஆதரவை வழங்கி வருகிறது. இதன் மூலம் உலகளாவிய ஏற்றுமதித் தளத்தில் இந்தியப் பொருள்கள் சென்றடையத் தேவையான முதலீடுகள் ஈர்க்கப்படும். வேளாண் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் வேளாண் பொருள்களை ஏற்றுமதி செய்யும் தனது உறுப்பினர்களுக்காக ஏற்றுமதி வளர்ச்சி நிதியுதவித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
விவசாயிகளுக்கு அத்தியாவசிய வேளாண் பொருள்கள் கிடைக்க என்ன நடவடிக்கை?
மாணிக்கம் தாகூருக்கு (விருதுநகர்) மத்திய வேளாண், விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் பதில்: விவசாயம் ஒரு மாநில விவகாரமாகும். அதற்குரிய மத்திய நிதியுதவி திட்டங்கள் ஆண்டு முழுவதும் செயல்படுத்தப்படுகின்றன. சமீபத்தில் காரீஃப் பருவத்துக்கு முந்தைய பிரசாரமாக நாடு முழுவதும் மே 29 முதல் ஜூன் 12 வரை செயல்படுத்தப்பட்ட விக்ஷித் கிருஷி சங்கல்ப் அபியான் பிரசாரத்தின்போது, 728 மாவட்டங்களில் சுமார் 61 ஆயிரம் திட்டங்களை நிறைவேற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. பல்துறை வேளாண் விஞ்ஞானிகளைக் கொண்ட 2,170 குழுக்கள் 1.35 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டன. காரீஃப் பருவத்திற்கான மேம்படுத்தப்பட்ட விவசாய தொழில்நுட்பங்கள், நவீன விவசாய முறையின் பல்வேறு சவால்கள் விதை போன்றவை குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தடயவியல் திறன் நவீனமய நிலவரம் என்ன?
டி.எம். கதிர் ஆனந்துக்கு (வேலூருக்கு) மத்திய உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் பதில்:
ஐசிஜேஎஸ் என்ற குற்றவியல் நீதி அமைப்பு 2.0 என்ற மத்திய உள் துறையின் திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் அங்கமாக தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு, வலையமைப்புகளை வலுப்படுத்துதல், தடயவியல், காவல்துறை, சிறைத்துறை மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவை மேம்படுத்தப்படுகின்றன. இவை தேசிய குற்ற ஆவணக்காப்பகம் மூலம் ஒருங்கிணைக்கப்படுகின்றன. ஐசிஜேஎஸ் 2.0 மூலம் தமிழகத்துக்கு ரூ.128.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு அனுமதிக்கப்பட்ட சமூக நலத் திட்டங்கள் என்ன?
ஈஸ்வரசாமிக்கு (பொள்ளாச்சி) மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் வீரேந்தர் குமார் பதில்: சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் மூலம் 2024-25 மற்றும் 2025-26 நிதியாண்டுகளில் தமிழகத்தில் பிரதமர் அனுசுசித் ஜாதி அபியுதய் யோஜனா, பட்டியலினத்தவர்கள் மற்றும் பிறருக்கான ப்ரீ-மெட்ரிக் உதவித்தொகை, அடல் வயோ அபியுதய் யோஜனா, பிற பிற்படுத்தப்பட்டோர், பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்டோருக்கு ப்ரீ-மெட்ரிக் உதவித்தொகை, ஓபிசி மாணவர்களுக்கான ஆராய்ச்சி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிப் பொருள்கள் உள்ளிட்ட 12 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பிரதமரின் அனுசுசித் ஜாதி அபியுதய் யோஜனாவின் மூலம் 2025-26 நிதியாண்டில் ரூ.16.59 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி?
மு. தம்பிதுரை (அதிமுக) கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் பதில்:
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான நிதிப் பகிர்வு வழிமுறை திட்டத்தின்படி வடகிழக்கு மற்றும் சிறப்புப் பிரிவு மாநிலங்களுக்கு 90:10 என்ற விகிதத்திலும், மற்ற இடங்களுக்கு 60:40 என்ற நிதிப் பகிர்வு வழிமுறை விகிதத்திலும் உள்ளது. இத்திட்டத்தின் கீழ், 157 அரசு மருத்துவக் கல்லூரிகள் மூன்று கட்டங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில், தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகள் (திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம், அரியல்லூர் மற்றும் கள்ளக்குறிச்சி) உள்பட 131 மருத்துவக் கல்லூரிகள் செயல்பாட்டில் உள்ளன.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்ட தமிழக மருத்துவமனைகள் எத்தனை?
கனிமொழி என்விஎன் சோமுக்கு (திமுக) மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரதாவ்ராவ் ஜாதவ் பதில்: தமிழகத்தில் ஆயுஷ்மான் பாரத் - பிரதமர் ஜன ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மருத்துவமனைகளின் எண்ணிக்கை 2024-25இல் 55 ஆகும். அதற்கு முன்னதாக, 2018-19இல் 1,117 மருத்துவமனைகள், 2020-21-இல் 93, 2021-22-இல் 670, 2022-23-இல் 73, 2023-24-இல் 126 என்ற அளவில் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டன. தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த மருத்துவமனையும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இருந்து விலகவில்லை.
தேசிய நீர்வழிப் பாதை விரிவாக்கத்தில் தமிழக திட்டங்கள் எத்தனை?
சி.வி. சண்முகத்துக்கு (அதிமுக) மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர் வழித்துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் பதில்: கடந்த மே மாத நிலவரப்படி தேசிய அளவில் 29 நீர்வழி திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. தென் மாநிலங்கள் உள்பட நாட்டில் உள்நாட்டு நீர்வழிகளை விரிவுபடுத்துவதற்காக மத்திய அரசு 111 தேசிய நீர்வழிகளை (5 முன்பே உள்ளவை மற்றும் 106 புதியவை) அறிவித்துள்ளது. தமிழகத்தில் 316 கி.மீ. தூரத்துக்கு வடக்கு பக்கிங்ஹாம் கால்வாய் (பெட்டகஞ்சம் முதல் சென்னை சென்ட்ரல் நிலையம் வரை); 110 கி.மீ தூரம் கொண்ட தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் (சென்னை மத்திய நிலையம் முதல் மரக்காணம் வரை); 22 கி.மீ தூரம் கொண்ட மரக்காணம் முதல் புதுச்சேரி வரை (கழுவெளி குளம் வழியாக) உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும்.