உடுமலைப்பேட்டை: விசாரணைக்கு சென்றவர் உயிரிழப்பு; வனத்துறை சித்ரவதையா? - மலைவாழ் மக்கள் சொல்வதென்ன?
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மேல்குருமலை பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (45).
இவர் மீது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கஞ்சா கடத்தியது தொடர்பாக வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணையில் போதிய ஆதாரம் இல்லாததால் கடந்த 29-ஆம் தேதி மாரிமுத்துவை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், 29-ஆம் தேதி மாலை, மூணாறுக்கு பேருந்தில் சென்ற மாரிமுத்துவை சிறுத்தைப் பல் கடத்தியதாக வனத்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்நிலையில், உடுமலைப்பேட்டை வனச்சரகர் அலுவலகத்தில் உள்ள கழிவறையில் மாரிமுத்து மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் செல்வன் கூறுகையில், "மாரிமுத்து மேல்குருமலையில் விவசாயம் செய்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா கடத்தியதாக மாரிமுத்து மீது வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், கடந்த ஜூலை 29 அன்று நீதிமன்றத்தால் மாரிமுத்து விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலை தொடர்பான ஆவணத்தில் கையெழுத்திட மாரிமுத்து 29-ஆம் தேதி உடுமலைக்கு வந்துள்ளார். அங்கு கையெழுத்து போட்டுவிட்டு மீண்டும் 29-ஆம் தேதி பிற்பகல் மூணாறு செல்லும் பேருந்தில் சென்றுள்ளார். அப்போது, சின்னாறு சோதனைச்சாவடியில் மாரிமுத்துவை பேருந்தில் இருந்து இறக்கிய வனத்துறையினர் சிறுத்தைப் பல் கடத்தியதாக அவரைக் கைது செய்து உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு வைத்து 29-ஆம் தேதி இரவு முழுவதும் தாக்கி உள்ளனர். இதில், பலத்த காயமடைந்த மாரிமுத்து உயிரிழந்துள்ளார். இதை மூடிமறைக்க அவர் கழிவறைக்குச் சென்றதாகவும், அப்போது, அங்குள்ள கம்பியில் வேஷ்டியைக் கொண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்ததாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ஒருவரை முறையற்ற காவலில் வைத்து சித்திரவதை செய்து, ஒரு போலியான வழக்கில் கைது செய்து ஜோடித்து கொலை செய்துள்ளனர். மாரிமுத்து கொலை தொடர்பாக தமிழக அரசு சிபிசிஐடி விசாரணை உத்தரவிட வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்" என்றார்.
இதுதொடர்பாக ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் வெங்கடேஷ் பேசுகையில், "கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கேரள அரசின் கலால் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் மூனாறு செல்லும் பேருந்தில் சென்று மாரிமுத்துவிடம் இருந்து சிறுத்தைப் பல்லை கைப்பற்றினர்.
சிவக்குமார் என்பவரிடம் இருந்து இந்த சிறுத்தைப் பல்லை வாங்கி வந்ததாக மாரிமுத்து கூறியதை அடுத்து, உடுமலை வனத்துறையினரிடம் மாரிமுத்துவை கேரள அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

மாரிமுத்துவை உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலகத்தில் வைத்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, 31-ஆம் தேதி அதிகாலை சிறுநீர் கழிப்பதற்காக கழிவறைக்குச் சென்ற மாரிமுத்து அங்கு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மாரிமுத்துவை அழைத்து வருவது விசாரணை நடத்துவது என அனைத்து சிசிடிவி கேமரா பதிவுகளும் உள்ளன. இதில், வனத்துறையினர் எந்த தவறும் செய்யவில்லை" என்றார்.