ஊட்டி: `மங்குஸ்தான் கிலோ ரூ.300' - நேரடி விற்பனையில் இறங்கிய தோட்டக்கலைத்துறை!
நீலகிரி மலையில் நிலவும் குளிர்ந்த காலநிலையைக் கண்டறிந்து 200 வருடங்களுக்கு முன்பு குடியேறிய பிரிட்டிஷார், தங்களுக்கான வாழிடச் சூழல்களை ஏற்படுத்திக் கொண்டனர்.

தேயிலை, காஃபி மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் இருந்தும் பல்வேறு காய்கறிகள், பழ மரக்கன்றுகளை கப்பல்கள் மூலம் தருவித்து, தகுந்த காலநிலை நிலவும் இடங்களுக்கு ஏற்ப நடவு செய்து பழப் பண்ணைகளை உருவாக்கயிருக்கிறார்கள்.
அவர்களால் உருவாக்கப்பட்ட நூற்றாண்டு பழைமை வாய்ந்த பழப் பண்ணைகளில் ஒன்றான பர்லியார் பண்ணையில், 'பழங்களின் ராணி' என அழைக்கப்படும் மங்குஸ்தான் முதல் மூலிகை மகத்துவம் நிறைந்த துரியன் வரை பழ ரகங்கள் பல உள்ளன. முற்றிலும் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் இந்த பழப் பண்ணையில் மங்குஸ்தான் பழங்கள் தற்போது காய்த்துக் குலுங்குகின்றன.

உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும் இந்தப் பழங்களை சுவைத்து மகிழும் விதமாக அரசு தாவரவியல் பூங்காவில் நேரடி விற்பனையில் ஈடுபட்டு வருகிறது தோட்டக்கலைத்துறை. ஒரு கிலோ ரூ.300 க்கு விற்பனை செய்யப்படும் பழங்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சுவைத்துச் செல்கிறார்கள்.