பாராட்டும் பட்டப் பெயரும்..! மாறிமாறி கொஞ்சிக் கொள்ளும் விஜய் தேவரகொண்டா - ரஷ்மி...
சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி!
உத்தமபாளையம்: தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் கடந்த 10 நாள்களுக்குப் பின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கினர்.
சுருளி அருவி சுற்றுலா மற்றும் ஆன்மீக ஸ்தலமாக இருப்பதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வந்து செல்வது வழக்கம்.
சுருளி அருவிக்கு முக்கிய நீர் வரத்தான மேற்குத் தொடா்ச்சி மலையிலுள்ள மேகமலை, மகாராஜாமெட்டு, இரவங்கலாறு, தூவானம் ஆகிய பகுதிகளில் தொடா் மழை பெய்து வந்தது. இதனால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த 19 ஆம் தேதி முதல் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.
இதற்கிடையே ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை (ஜூலை 24) அருவியில் புனித நீராட பக்தர்களுக்கு வனத் துறையினா் அனுமதி வழங்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.
இதனை அடுத்து சுருளி அருவியில் நீர்வரத்து சற்று குறைந்த நிலையில் ஆடி அமாவாசை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களை அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்த ஒரு சில மணி நேரத்தில் நீர்வரத்து அதிகரித்ததால் மீண்டும் தடை விதித்தனர்.
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பொழிவு குறைந்து சுருளி அருவிக்கு நீர்வரத்து சீரானதால் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
இதையடுத்து காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் வழக்கம் போல் குளிக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.