வெளியேற்றத் தயாரானதா மத்திய அரசு? தன்கர் ராஜிநாமாவின் வெளிவராத பின்னணி!
குடியரசுத் துணைத் தலைவர் (பதவிவழி மாநிலங்களவைத் தலைவர்) பதவியிலிருந்து ஜகதீப் தன்கரை வெளியேற்றுவது என்று ஆளும் தேசிய ஜனநாயக் கூட்டணி முடிவு செய்துவிட்ட நிலையில்தான் வேறு வழியின்றி அவர் ராஜிநாமா செய்துவிட்டார் எனத் தகவல்கள் வெளியாகின்றன.
ஜகதீப் தன்கர் ராஜிநாமா செய்த நாளில் - நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளில் - மாநிலங்களவையில் காலையிலிருந்தே வழக்கத்துக்கு மாறாகத்தான் நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக அரசைக் கடுமையாகக் குறைகூறிப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயைக் கூடுதல் நேரம் பேச அனுமதித்தார் அவைத் தலைவர் தன்கர். பாரதிய ஜனதா தலைவர் நட்டா போன்றோரின் குறுக்கீடுகளையும் கண்டுகொள்ளவில்லை.
வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் எரிக்கப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த, அலாகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் பதவி நீக்கத்துக்கான தீர்மானத்தையும் ஜகதீப் தன்கர் ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து நீதித்துறைக்கும் நீதிபதிகளுக்கும் எதிராகக் கடும் விமர்சனங்களை வைத்துக்கொண்டிருந்த முன்னாள் வழக்குரைஞரான ஜகதீப் தன்கர், மத்திய அரசின் எண்ணத்துக்கு அல்லது திட்டத்துக்கு மாறாக நீதிபதி வர்மா தொடர்பான எதிர்க்கட்சிகளின் நோட்டீஸை / தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
நீதிபதி பதவி நீக்கத் தீர்மான விஷயத்திற்கு ஆதரவாக மத்திய அரசு இல்லை என்று மூத்த அமைச்சர் ஒருவர் ஏற்கெனவே தன்கருக்குத் தெளிவுபடுத்திவிட்டதாகவும் ஆனாலும், அதைக் கண்டுகொள்ளாமல் எதிர்க்கட்சிகளின் யோசனையை ஏற்று தன்கர் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நீதிபதி பதவி நீக்கத் தீர்மானம் அனுமதிக்கப்படவில்லை (not admitted); சமர்ப்பிக்கப்பட்டது (submitted) என்று பின்னர் விளக்கங்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத் தக்கது.
பகல் 12.30 மணிக்கு சிறிது நேரமே நடந்து முடிந்த அலுவல் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே தன்கர் வெளியேறுவதற்கான நேரம் தொடங்கிவிட்டது போல.
இந்தக் கூட்டத்தில், பிற கட்சித் தலைவர்களுடன் பாரதிய ஜனதா தலைவர் நட்டாவும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜுவும்கூட பங்கேற்றனர். கூட்டத்தில், ஆபரேஷன் சிந்தூர் பற்றிப் பிரதமர் நரேந்திர மோடி எப்போது அவையில் பேசப் போகிறார் என்று அரசிடம் கேட்டுச் சொல்லுங்கள் என்று அமைச்சர்களிடம் ஜகதீப் தன்கர் தெரிவித்திருக்கிறார்.
இந்தக் கேள்வியால் மிகவுமே எரிச்சலுற்றவர்களாகக் காணப்பட்ட மத்திய அமைச்சர்கள், அவையில் எப்போது பிரதமர் பேச வேண்டும் என்பதையெல்லாம் மாநிலங்களவைத் தலைவரோ, எதிர்க்கட்சிகளோ தீர்மானிக்க முடியாது என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு உணவுக்காக இல்லத்துக்குச் சென்றிருக்கிறார் தன்கர். அந்த நேரத்தில் மூத்த அமைச்சர் ஒருவர், தன்கருடன் பேசுவதற்காகத் தொலைபேசியில் அழைத்திருக்கிறார், ஒரு முறை அல்ல, இரண்டு முறை. ஆனால், தன்கர் பேச மறுத்து / அல்லது தவிர்த்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதான் தன்கரைத் ‘தட்டித் தூக்குவதற்கான’ காரணமாகிவிட்டதெனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, இனியும் பொறுப்பதில்லை; முடித்துவைக்க வேண்டியதுதான் என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்திருக்கிறது.
மாலை 4 மணிக்கு மாநிலங்களவைக்கு வந்த தன்கர், நீதிபதி வர்மாவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் தீர்மானம் பற்றிக் குறிப்பிட்டார். ஆனால், அப்போதே குடியரசுத் துணைத் தலைவரை ‘வழியனுப்பி வைப்பதற்கான’ வேலைகளை அரசு தொடங்கிவிட்டிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில்தான், மாலை 4.30 மணிக்கு மீண்டும் அலுவல் ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. ஆனால், கூட்டத்துக்கு அரசுத் தரப்பிலிருந்து ஒருவரும் வரவில்லை.
இதனிடையே, தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் அனைவரும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அலுவலகத்தில் திரண்டிருக்கின்றனர். இங்கேதான், குடியரசுத் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஜகதீப் தன்கரை அகற்றுவதற்காக அனைவருடைய கையொப்பங்களும் பெறப்பட்டிருக்கின்றன. இந்த பதவி நீக்கத்துக்கு 134 பேர் ஆதரவாக இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எப்படியும் இந்தப் பிரச்சினையை அன்றே முடித்துவிட வேண்டும்; மறுநாளுக்கு ஒத்திவைக்க வேண்டியதில்லை என்பதில் அரசு மிகவும் தீவிரமாக இருந்திருக்கும் போல. மூடி முத்திரையிடப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களின் கடிதம், உடனடியாக மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வாலிடம் அளிக்கப்பட்டிருக்கிறது. அவர் அதை மாநிலங்களவைத் தலைவர் அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று, மாநிலங்களவைச் செயலகத்தில் சமர்ப்பித்துள்ளார் – மணி மாலை 4.50 மணி!
இந்தக் கடிதம், தன்கரைப் பதவியிலிருந்து அகற்றுவது தொடர்பானதுதான் என்பது உறுதியாகத் தெரிந்தபோதிலும், கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பது பற்றி அரசு வட்டாரங்கள் எதுவுமே தெரிவிக்கவில்லை. இந்தக் கடிதத்தின் தேவை பற்றி எம்.பி.க்களைத் தனித்தனிக் குழுக்களாக அழைத்து மூத்த அமைச்சர்கள் விளக்கியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் பத்து நிமிஷங்கள் தாண்டியிருந்தால் – மாலை 5 மணிக்கு அலுவலகப் பணி நேரம் முடிந்துவிடும் - எல்லா நடவடிக்கைகளும் மறுநாளுக்குக் கடத்தப்பட்டு விட்டிருக்கும். சம்பந்தப்பட்டவர்களிடையே சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்; யாரேனும் தலையிடவும் செய்திருக்கலாம். அல்லது சர்ச்சைக்குரிய வகையில் ஜகதீப் தன்கரேகூட ஏதேனும் செயல்பட்டிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அப்படி எந்தவொரு சந்தர்ப்பம் ஏற்படுவதையும் அரசு விரும்பவில்லை – கடைசி பத்து நிமிஷங்களை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டுவிட்டது.
மேற்கு வங்கத்தில் ஆளுநராக இருந்த காலத்தில் – நிர்வாக ரீதியிலும் அரசியல் ரீதியிலும் முதல்வர் மமதா பானர்ஜிக்குக் கடுமையான இம்சைகளைத் தந்துகொண்டிருந்ததன் மூலம் நாடு தழுவிய புகழ் பெற்றவர் தன்கர்.
குடியரசுத் துணைத் தலைவரான பிறகு, மாநிலங்களவைத் தலைவராகச் செயல்பட்ட காலத்திலும் பல்வேறு தருணங்களில் ஆளுங்கட்சியின் / ஆளுங் கூட்டணிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தவர், அதுவும் எதிர்க்கட்சிகளே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் அளவுக்கு.
ஆனால், குடியரசுத் துணைத் தலைவராக ஜகதீப் தன்கரின் கடைசி வேலை நாள் தடாலடியாக முடிவுக்கு வந்துவிட்டது, அதே ஆளும் கூட்டணியால்! அவருக்குப் பதவியை ராஜிநாமா செய்வதைத் தவிர வேறு வழியே இல்லாமல் போய்விட்டது!
எனவேதான், சின்னதாக ஒரு வாழ்த்துக் குறிப்புடன் பிரதமர் நரேந்திர மோடி முடித்துக் கொண்டுவிட்டார்போல. தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களில்கூட ஒரே ஒருவரைத் தவிர யாரும் தன்கருக்காக வருந்தவுமில்லை; வாழ்த்தவுமில்லை.
ஜனநாயக இந்தியாவின் வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத வகையில் நடைபெற்றுள்ள குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கரின் பதவி விலகல் பற்றி, வருங்காலத்தில் மேலும் மேலும் உண்மையோ, பொய்யோ, அல்லது இரண்டு கலந்தோ, புதுப்புதுத் தகவல்கள் வெளிவரலாம்; வந்துகொண்டுதானிருக்கும் - அரசுத் தரப்பிலிருந்தோ, தன்கர் தரப்பிலிருந்தோ அதிகாரப்பூர்வமாக விளக்கப்படாத வரையில்!