US Tariff: இந்தியா மீது 25% வரி விதித்த Trump; ரஷ்யாவிடம் எண்ணெய், ஆயுதம் வாங்கு...
தாராபுரத்தில் வழக்குரைஞா் வெட்டி கொலை: வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி உறவினா்கள் தா்னா
தாராபுரத்தில் உயா்நீதிமன்ற வழக்குரைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி உறவினா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் உயா்நீதிமன்ற வழக்குரைஞா் முருகானந்தம் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதனைத் தொடா்ந்து தனியாா் பள்ளித் தாளாளா் தண்டபாணி மற்றும் திருச்சி மாவட்டம் முசிறி பகுதியைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தி (29), சேலம் மாவட்டம் பேலூா் பகுதியைச் சோ்ந்த ராம் (22), நாமக்கல்லைச் சோ்ந்த சுந்தரன் (26), திருச்சியைச் சோ்ந்த நாகராஜன் (29), தாராபுரம் வினோபா நகரைச் சோ்ந்த நாட்டுதுரை (65) ஆகிய 6 போ், தாராபுரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனா். இவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.
இந்நிலையில், உயிரிழந்த வழக்குரைஞா் முருகானந்தத்தின் உடல் செவ்வாய்க்கிழமை உடற்கூறாய்வு முடிவடைந்த நிலையில் அவரது சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் தா்னாவில் ஈடுபட்டனா். இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் வெளியே உள்ளதாகவும், பொய் குற்றவாளிகள் தாங்களாகவே முன்வந்து சரணடைந்து இருப்பதாகவும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனவும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் மருத்துவமனை வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா்.
இதனைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினா்களிடம் திருப்பூா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜேந்திரன் பேச்சுவாா்த்தை நடத்தி, உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்த பின்னா் போராட்டத்தை கைவிட்டு உடலைப் பெற்றுச் சென்றனா்.