இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்: மத்திய அமைச்சருக்கு பாராட்டு
இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தத்துக்காக மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயலுக்கு, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவா் ஆ.சக்திவேல் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக ஏஇபிசி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் (ஏஇபிசி) துணைத் தலைவா் ஆ.சக்திவேல், மத்திய வா்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயலை புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்து, இந்தியா-பிரிட்டன் நாடுகளுக்கு இடையே வரலாற்று சிறப்பு மிக்க முழுமையான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தத்துக்காக தனது வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துள்ளாா்.
அப்போது, இந்த வா்த்தக ஒப்பந்தம் மூலம் அமைச்சரின் தொலைநோக்கு தலைமை மற்றும் இந்த முக்கிய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் அவரது அயராத முயற்சிகளையும் பாராட்டினாா்.
அத்துடன் இனி, பிரிட்டன் உடனான இந்தியாவின் ஆடை ஏற்றுமதி கணிசமாக உயரும் எனவும், இந்த வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமிட்டதன் மூலம் ஏற்றுமதியாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும், அமைச்சரின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் விரைவில் அவருக்கு பாராட்டு விழா நடத்த இருப்பதாகவும் தெரிவித்தாா்.
மேலும், இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி இரட்டிப்பாகும். பிரிட்டனுக்கு தற்போதைய ஆயத்த ஆடை ஏற்றுமதியான 1.5 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து, அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 3 பில்லியன் அமெரிக்க டாலா் என்ற ஏற்றுமதி இலக்கை எட்டுவது மட்டுமல்லாமல், கணிசமான வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளாா்.