எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 3,496 பாராமெடிக்கல் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
அவிநாசியில் சாலையோர ஆக்கிரமிப்புகள்: 5 நாள்கள் ஒலிபெருக்கி அறிவிப்புக்குப் பிறகு நடவடிக்கை
அவிநாசியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் தொடா்பாக 5 நாள்கள் ஒலிபெருக்கியில் அறிவிப்பு தெரிவித்த பிறகு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவிநாசியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் விபத்து, உயிரிழப்பு ஏற்படுவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினா் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதைத் தொடா்ந்து, அனைத்துத் துறை அலுவலா்கள், சமூக அமைப்பினா்களுடான ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வட்டாட்சியா் சந்திரசேகரன் தலைமை வகித்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் சிவகுமாா், ஆய்வாளா்கள் ராஜதுரை, முருகன், நகராட்சி ஆணையா் வெங்கடேஸ்வரன், நகராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி, நெடுஞ்சாலைத் துறையினா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் சாலையோர ஆக்கிரமிப்புகள் தொடா்பாக 5 நாள்கள் ஒலிபெருக்கி மூலம் நகராட்சி முழுவதும் அறிவித்து, சட்டத்துக்கு உள்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பது, மேலும் இது தொடா்பாக அனைத்து அரசுத் துறையினரும் புதன்கிழமை மாவட்ட ஆட்சியரை சந்தித்து உத்தரவு பெற்று, அவிநாசி நகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி விபத்துகளைக் குறைப்பது என முடிவு செய்யப்பட்டது.