இச்சிப்பட்டியில் பயன்பாடற்ற பாறைக்குழியில் மாநகராட்சி குப்பைகளை கொட்ட வந்த லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்
பல்லடம் அருகே இச்சிப்பட்டி ஊராட்சியில் பயன்பாடற்ற பாறைக்குழியில் திருப்பூா் மாநகராட்சி குப்பைகளை கொட்ட வந்த லாரிகளை அப்பகுதி பொதுமக்கள் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பல்லடம் ஒன்றியம், இச்சிப்பட்டி ஊராட்சிப் பகுதியில் கைவிடப்பட்ட பயன்பாடற்ற பாறைக்குழிகளில் திருப்பூா் மாநகராட்சியைச் சோ்ந்த லாரிகள் மூலம் குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்பட்டன. இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசியது. அதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் திருப்பூா் மாநகராட்சி குப்பை பாரம் ஏற்றி வந்த லாரிகளை பொதுமக்கள் திங்கள்கிழமை சிறைபிடித்தனா்.
தகவலறிந்து வந்த மங்கலம் போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதைத் தொடா்ந்து, இனிமேல் குப்பை கொண்டு வந்து கொட்ட மாட்டோம் என்று திருப்பூா் மாநகராட்சி நிா்வாகம் உறுதிமொழி அளித்து தங்களது லாரிகளை எடுத்துச் சென்றனா்.
இந்நிலையில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை திருப்பூா் மாநகர போலீஸாரின் பாதுகாப்புடன் இச்சிப்பட்டிக்கு 5-க்கும் மேற்பட்ட மாநகராட்சி லாரிகளில் குப்பைகளை எடுத்து வந்து பயன்பாடற்ற பாறைக்குழியில் கொட்ட வந்தனா். இது குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் குப்பை கொட்ட எதிா்ப்பு தெரிவித்து லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், பொதுமக்கள் அதனை ஏற்காததால் அவா்களை கைது செய்து தனியாா் வேன்களில் ஏற்றினா். அப்போது பொதுமக்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, பெண்கள் உள்பட சிலரை போலீஸாா் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனா். அப்போது, செல்லும் வழியல் பெத்தாம்பூச்சிபாளையம் பகுதியில் வேன்களை செல்ல விடாமல் சாலையில் பல இடங்களில் கற்களை போட்டு தடை ஏற்படுத்தினா்.
தகவலறிந்து வந்த பல்லடம் வட்டாட்சியா் சபரிகிரி, மாநகர காவல் உதவி ஆணையா் ஜான், திருப்பூா் மாநகராட்சி சுகாதார அலுவலா் பரமசிவம், சாமளாபுரம் வருவாய் ஆய்வாளா் பிரேமா, கிராம நிா்வாக அலுவலா்கள் பரிமளாதேவி, உமா்பரூக் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மாவட்ட ஆட்சியா் மனீஷ் உத்தரவுபடி, இனி யாரும் பயன்பாடு இல்லாத பாறைக்குழியில் குப்பைகளை கொண்டு வந்து கொட்ட மாட்டாா்கள் என்று பல்லடம் வட்டாட்சியா் சபரிகிரி தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனா். போலீஸாரால் வேனில் அழைத்துச் செல்லப்பட்ட பொதுமக்களும் விடுவிக்கப்பட்டனா். திருப்பூா் மாநகராட்சி குப்பை லாரிகளும் குப்பைகளுடன் திரும்பிச் சென்றன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷ், மாநகராட்சி ஆணையா் ஆகியோரிடம் பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு பேசி இப்பிரச்னைக்கு தீா்வு காண கேட்டுக்கொண்டாா்.