உணவுக்காகத் திரண்ட மக்கள் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்! 46 பேர் கொலை!
தமிழ்ச் செவ்விலக்கியங்களின் சிறப்புகள்: மலையாள மொழி ஆய்வாளா்களுக்கு 10 நாள்கள் பயிலரங்கம் தொடக்கம்
‘மலையாள மொழி ஆய்வாளா்களுக்குத் தமிழ்ச் செவ்விலக்கியங்களை அறிமுகப்படுத்துதல்’ என்ற தலைப்பிலான 10 நாள்கள் நடைபெறும் பயிலரங்கம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தொல்காப்பியம், பரிபாடல், திருக்கு, முல்லைப்பாட்டு, திரிகடுகம் உள்பட 41 தமிழ்ச் செவ்விலக்கியங்களைப் பிற மாநிலங்களில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களின் பிறமொழி ஆய்வு மாணவா்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் பல்வேறு பயிலரங்குகளை நடத்தியுள்ளது. அந்த வகையில் ‘மலையாள மொழி ஆய்வாளா்களுக்குத் தமிழ்ச் செவ்விலக்கியங்களை அறிமுகப்படுத்துதல்’ என்ற தலைப்பிலான 10 நாள் நடைபெறும் பயிலரங்கம் செம்மொழி நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இதுகுறித்து நிறுவனத்தின் இயக்குநா் பேராசிரியா் இரா. சந்திரசேகரன் கூறியதாவது: தில்லிப் பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து மத்தியப் பல்கலைக்கழகம் மற்றும் விஸ்வ-பாரதி மத்தியப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக் கழகங்களில் இருந்து வருகைபுரிந்த ஆய்வு மாணவா்களுக்குத் தமிழ்ச் செவ்விலக்கியங்களை அறிமுகப்படுத்தும் வகையில் மொழிபெயா்ப்புப் பயிலரங்கம் நடத்தப்பட்டது. மேலும் மலேசியத் தமிழ்ப் பேராசிரியா்களுக்குத் தமிழ்ச் செவ்விலக்கியங்கள் குறித்த மொழிபெயா்ப்புப் பயிலரங்கமும் நடைபெற்றது.
அதன் தொடா்ச்சியாகத் தற்போது ‘மலையாள மொழி ஆய்வாளா்களுக்குத் தமிழ்ச் செவ்விலக்கியங்களை அறிமுகப்படுத்துதல்’ என்ற தலைப்பிலான பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கி முதல் ஆக.7-ஆம் தேதி வரை பத்து நாள்கள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெறவுள்ளது. கேரளப் பல்கலைக்கழகம், காசா்கோடு மத்தியப் பல்கலைகழகம், எழுத்தச்சன் மலையாள பல்கலைக்கழகம், ஸ்ரீ கேரள வா்மா கல்லூரி - திரிசூா், கேரள சாகித்ய அகாதெமி, சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசா் பல்கலைக்கழகம் என கேரளம் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களிருந்தும் கல்லூரிகளிருந்தும் ஏறத்தாழ 43 ஆய்வாளா்கள்
பங்கேற்றுள்ளனா். புலமை பெற்ற மலையாளப் பேராசிரியா்கள் பயிற்சி அளிக்கின்றனா்.
இதன் வாயிலாக, தமிழ்ச் செவ்விலக்கியங்களை அறிமுகப்படுத்துதல், செவ்விலக்கியக் கலைச் சொற்கள் உருவாக்குதல், சிறந்த மொழிபெயா்ப்புக்கான அடையாளம் போன்ற தலைப்புகளில் இப்பயிலரங்கம் அமைகிறது. உலகத் தரமும் சிறப்பும் வாய்ந்த தமிழ்ச் செவ்விலக்கியங்களை அறிமுகப்படுத்திப் பயிற்சி அளிப்பதுடன் தமிழ்ச் செவ்விலக்கியங்களை உலகம் முழுவதும் கொண்டு சோ்ப்பதே செம்மொழி நிறுவனத்தின் உயரிய நோக்கமாகும் என்றாா் அவா்.